கோவில் திருவிழாவில் கல்வீச்சு - சாலைமறியலால் பதற்றம்


கோவில் திருவிழாவில் கல்வீச்சு - சாலைமறியலால் பதற்றம்
x
தினத்தந்தி 18 Oct 2019 3:45 AM IST (Updated: 18 Oct 2019 2:37 AM IST)
t-max-icont-min-icon

கோவில் திருவிழாவில் கல்வீச்சு சம்பவம் குறித்து இரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

உசிலம்பட்டி, 

உசிலம்பட்டி எழுமலை அருகே உள்ளது சூலப்புரம். இந்த ஊரில் செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் பொங்கல் வைத்து அக்னிச் சட்டி எடுத்து கொண்டாடினர். நேற்று முன்தினம் இரவு உலைப்பட்டியைச் சேர்ந்த ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அம்மனை வழிபட ஊர்வலமாக வந்துள்ளனர். அப்போது மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அம்மனை வழிபட வந்துள்ளனர்.

அப்போது சூலப்புரத்தைச் சேர்ந்த 3 பேர் உலைப்பட்டியிலிருந்து வந்தவர்கள் மீது கல்வீசியதாக கூறப்படுகிறது. இதில் உலைப்பட்டியைச் சேர்ந்த வேடன்(வயது31) என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த வேடனை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து வந்த புகாரைத் தொடர்ந்து எம்.கல்லுப்பட்டி போலீசார் சூலப்புரத்தைச் சேர்ந்த சிங்கராஜ்(45), சுந்தரமூர்த்தி(42), முருகன்(50) ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து சிங்கராஜை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடிவருகின்றனர்.

இந்த நிலையில் உலைப்பட்டியைச் சேர்ந்த ஒரு சமூகத் தினர், கல்வீசி தாக்கிய 3 பேரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி திடீரென்று எழுமலை-எம்.கல்லுப்பட்டி சாலையில் உள்ள உலைப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர்கள் தினகரன், சார்லஸ் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம், கோரிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர்.

இந்த நிலையில் சூலப்புரம், உலைப்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இன்னொரு சமூகத்தினர்கள், நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை எனவே எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டுமென்று கோரி அதே இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இரு சமூகத்தினர்களும் மாறி மாறி சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. போலீசார் மறியலில் ஈடுபட்ட இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களிடமும் சுமூக தீர்வு காணும் நோக்கில் தனித்தனியே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சாலை மறியலினால் எம்.கல்லுப்பட்டியிலிருந்து எழுமலை வழியாக உசிலம்பட்டிக்கு செல்லும் சாலையில் ஒரு நாள் முழுவதும் போக்குவரத்து நடைபெறவில்லை. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இந்த நிலையில் ைகது செய்யப்பட்டவரை போலீசார் விடுவித்தனர். உண்ைமயான குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

Next Story