நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் “தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு மரண அடி கொடுங்கள்” - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
“நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு மரணஅடி கொடுங்கள்“ என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
நெல்லை,
அ.தி.மு.க. அரசின் 48-வது ஆண்டு தொடக்க விழா, நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து பிரசாரம் செய்யும் நிகழ்ச்சி நாங்குநேரி தொகுதியில் உள்ள அரியகுளத்தில் நேற்று நடந்தது.
இதற்காக அங்கு மேடை அமைக்கப்பட்டு இருந்தது. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் பெரியார். தமிழ் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் பேரறிஞர் அண்ணா. ஏழை-எளிய மக்களுக்காக திட்டங்களை தீட்டி செயல்படுத்தியவர் எம்.ஜி.ஆர். இவர்கள் 3 பேரும் ஒன்றாக ஒருங்கிணைத்து மக்களுக்காக வாழ்ந்தவர் ஜெயலலிதா.
அ.தி.மு.க.வை 16 லட்சம் தொண்டர்களுடன் எம்.ஜி.ஆர். உருவாக்கினார். அவரது மறைவுக்கு பிறகு 18 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். அந்த கட்சியை ராணுவ கட்டுப்பாட்டோடு வளர்த்து 1½ கோடி தொண்டர்களாக உருவாக்கிய பெருமை ஜெயலலிதாவை சேரும். தமிழகத்தில் அ.தி.மு.க. 29 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து உள்ளது. வரும் காலங்களிலும் தொடர்ந்து ஆட்சியை பிடிக்கும். அ.தி.மு.க. ஒரு எக்கு கோட்டை. இதை யாராலும் அசைக்க முடியாது.
நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்து உள்ளது. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு தேவையான ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 2023-ம் ஆண்டுக்குள் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாறிவிடும். கல்வியில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு காரணம் ஜெயலலிதா தான். மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள் உள்பட 16 வகையான கல்வி உபகரணங்களை வழங்கி உள்ளார்.
இந்தியாவில் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கியதும் தமிழகம் தான். விவசாயத்துறையில் தமிழகம் பெரிய சாதனைகளை செய்துள்ளது. 1 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இதற்காக மத்திய அரசு விருது வழங்கி உள்ளது. கிராமத்தில் உள்ளவர்கள் மேம்பாடு அடைவதற்காக இலவச ஆடு, மாடு வழங்கி உள்ளது. மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் சாதி கலவரங்கள், சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கிடந்தது. ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த உடன் அதை கட்டுப்படுத்தி தமிழகத்தை அமைதி பூங்காவாக மாற்றினார்.
மு.க.ஸ்டாலினுக்கு ஒரே ஒரு ஆசை தான். எந்த பொய்யை சொல்லியாவது முதல்-அமைச்சராக வேண்டும் என்பது தான். இதற்காக எந்த பொய் வேண்டுமானாலும் சொல்வார். அவர் முதல்-அமைச்சர் பதவிக்கு சரிபட்டு வரமாட்டார்.
காவிரி பிரச்சினை, இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கு மிகப்பெரிய துரோகம் செய்து உள்ளது. இந்த கூட்டணிக்கு சரியான பாடம் புகட்டுவதற்கு உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்து உள்ளது.
இந்த தேர்தலில் நீங்கள் கொடுக்கக்கூடிய அடி தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அடுத்த தேர்தல்களில் நிற்பதற்கு பயப்பட வேண்டும். அந்த அளவுக்கு நீங்கள் அவர்களுக்கு மரணஅடி கொடுக்க வேண்டும். எனவே, அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரசாரத்தில் வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், அமைச்சர்கள் தங்கமணி, ராஜலட்சுமி, செல்லூர் ராஜூ, உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் வைகை செல்வன், நத்தம் விசுவநாதன், பொன்னையன், அமைப்பு செயலாளர் மனோஜ் பாண்டியன், மாவட்ட செயலாளர்கள் தச்சை கணேசராஜா, பிரபாகரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன்உசேன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரியபெருமாள், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர்கள் ஜெரால்டு, இ.நடராஜன், கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, த.மா.கா. மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன், இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் நெல்லை கமாருத்தீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடுவக்குறிச்சியில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Related Tags :
Next Story