பரமேஸ்வரின் உதவியாளர் தற்கொலை: வருமான வரி சோதனையில் ரூ.2 கோடி சிக்கியது அம்பலம்


பரமேஸ்வரின் உதவியாளர் தற்கொலை: வருமான வரி சோதனையில் ரூ.2 கோடி சிக்கியது அம்பலம்
x
தினத்தந்தி 17 Oct 2019 11:36 PM GMT (Updated: 17 Oct 2019 11:36 PM GMT)

பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்ட பரமேஸ்வரின் உதவியாளரின் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.2 கோடி சிக்கியது உள்பட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரு,

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராக இருப்பவர் பரமேஸ்வர். முன்னாள் துணை முதல்-மந்திரியான இவரிடம் ரமேஷ் என்பவர் உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை பரமேஸ்வரின் கல்வி அறக்கட்டளை, அவருடைய கல்லூரிகள், வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. சோதனையில் ரொக்கப்பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கின.

அதேபோல், அவருடைய உதவியாளரான ரமேசுக்கு சொந்தமான மரியப்பனபாளையாவில் உள்ள வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிலையில், கடந்த 12-ந் தேதி ரமேஷ் பெங்களூரு ஞானபாரதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் எழுதி வைத்த கடிதத்தில், ‘எனது வீட்டில் வருமான வரி சோதனை நடந்ததால் மரியாதைக்கு பயந்து தற்கொலை செய்து கொள்கிறேன்‘ என்பன போன்ற விவரங்களை குறிப்பிட்டு இருந்தார். இதுபற்றிய புகாரின் பேரில் ஞானபாரதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதற்கிடையே, அவருடைய சாவுக்கு வருமான வரித்துறை அதிகாரிகளின் தொல்லை தான் காரணம் என்று காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட ரமேஷ் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது மரியப்பனபாளையாவில் உள்ள ரமேசின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதில் ரூ.2 கோடி சிக்கியது. இதற்கு அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. மேலும் ஒரு டைரியும் சிக்கியது. அந்த டைரியில் பரமேஸ்வர் போலீஸ் மந்திரியாக இருந்தபோது அவருடைய பெயரை கூறி மன்சூர்கான் நடத்திய ஐ.எம்.ஏ. நிறுவனத்திடம் இருந்து ரூ.5 கோடி வாங்கிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் ரமேசின் செல்போனில் கேளிக்கை விடுதிகளில் பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்கள் இருந்துள்ளன. இந்த வீடியோக்கள் அடங்கிய செல்போனை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதுபோன்ற காரணங்களினாலும், இந்த விவரங்கள் வெளியில் வந்தால் பரமேஸ்வரிடம் தான் பெற்ற நல்லபெயர் கெட்டுவிடும் என பயந்துபோன ரமேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதுபற்றி தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story