கூடலூர் அருகே, 18-ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு - கலெக்டர் மதகை இயக்கி திறந்து வைத்தார்


கூடலூர் அருகே, 18-ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு - கலெக்டர்  மதகை இயக்கி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 18 Oct 2019 10:00 PM GMT (Updated: 18 Oct 2019 1:39 PM GMT)

கூடலூர் அருகே 18-ம் கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் பல்லவி பல்தேவ் கலந்து கொண்டு மதகை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தார்.

கூடலூர்,

உத்தமபாளையம், போடி வட்டத்தில் மானாவாரி நிலங்கள் பயன்பெறும் வகையில் 1999-ம் ஆண்டு, 18-ம் கால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின்படி லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையம் அருகிலிருந்து 40.80 கிலோமீட்டர் தூரம் கால்வாய் வெட்டி, முல்லைப்பெரியாற்று தண்ணீரை கூடலூர், கம்பம், பாளையம், தேவாரம் வழியாக சுத்தகங்கை ஓடை வரை கொண்டு செல்லப்படுகிறது. மேலும் இக்கால்வாய் தண்ணீரை உத்தமபாளையம் மற்றும் போடி தாலுகாவிலுள்ள 44 கண்மாய்களில் நிரப்பி, நிலத்தடிநீர் பெருகுவதோடு, நேரடியாக 4 ஆயிரத்து 614.25 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயரும்போதும், அக்டோபர் 1-ந்தேதிக்குப்பின் பெரியாறு மற்றும் வைகை அணையின் இருப்புநீர் 6 ஆயிரத்து 250 மில்லியன் கனஅடியாக இருந்தால், 18-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க அரசாணை உள்ளது. தற்போது முல்லைப்பெரியாறு அணையில் 3 ஆயிரத்து 569 மில்லியன் கனஅடியும், வைகை அணையில் 3 ஆயிரத்து 867 மில்லியன் கனஅடியும் என மொத்தம் 7 ஆயிரத்து 436 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது.

இதைத்தொடர்ந்து 18-ம் கால்வாயில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று 18-ம் கால்வாயில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நேற்று முதல் 30 நாட்களுக்கு வினாடிக்கு 98 கனஅடி வீதம் மொத்தம் 255 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து கூடலூர் அருகே 18-ம் கால்வாயில் தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. அதையொட்டி கூடலூர் லோயர்கேம்ப் தலைமதகு பகுதியான மின்உற்பத்தி நிலையம் அருகே தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் மதகை இயக்கி 18-ம் கால்வாயில் தண்ணீரை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் திலகவதி, உத்தமபாளையம் பொதுப்பணித்துறை உதவிசெயற்பொறியாளர் அன்புசெல்வன், உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி, 18-ம் கால்வாய் விவசாய சங்க தலைவர் ராமராஜ், செயலாளர் திருப்பதிவாசகன், துணைத்தலைவர் காளிமுத்து, தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புகுழு செயலாளர் செங்குட்டுவன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story