கோவையில் சம்பவம்: 5 வயது குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்று தாய் தற்கொலை - போலீசார் விசாரணை


கோவையில் சம்பவம்: 5 வயது குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்று தாய் தற்கொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 19 Oct 2019 4:30 AM IST (Updated: 18 Oct 2019 10:44 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் 5 வயது குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை,

கோவையை அடுத்த ஒண்டிபுதூர் ஸ்ரீகாமாட்சி நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் கண்ணன். சாப்ட்வேர் என்ஜினீயர். இவருடைய மனைவி வேதவள்ளி (வயது 41). அதே பகுதியை சேர்ந்தவர். இவர்களுக்கு கார்குழலி (5) என்ற மகள் இருந்தாள்.

கண்ணன் அமெரிக்காவில் உள்ள ஒரு ஐ.டி.நிறுவனத்தில் வேலை செய்ததால் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் வேதவள்ளி கணவரை பிரிந்து தனது குழந்தையுடன் கோவை ஒண்டிப்புதூரில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அங்கு தனது தந்தையான ஓய்வுபெற்ற ராணுவீரர் ராமகிருஷ்ணன், தாயார் லீலாவதி, தம்பி மாதவனுடன் வசித்து வந்தார்.

இந்தநிலையில் வேதவள்ளி கடந்த சில ஆண்டுகளாகவே மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் வேதவள்ளி தனது பெற்றோர் மற்றும் தம்பியுடன் அடிக்கடி வாக்குவாதம் செய்து சண்டை போட்டு வந்ததாக தெரிகிறது.

நேற்று முன்தினம் இரவு வேதவள்ளி தனது பெற்றோர் மற்றும் தம்பியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த வேதவள்ளி பெற்றோர் மற்றும் தம்பியை தாக்கி உள்ளார். இதில் மாதவன் கால் தடுக்கி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தார். அத்துடன் வேதவள்ளி தனது மகளின் கழுத்தை நெரித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் வீட்டில் இருந்த டி.வி. உள்ளிட்ட பொருட்களை தூக்கிப்போட்டு உடைத்து உள்ளார்.

கழுத்தை நெரித்ததில் குழந்தை வலியால் துடித்தது. இதைப்பார்த்த பெற்றோர் உடனே குழந்தையை தூக்கிக்கொண்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனா். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தொிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மற்றும் வேதவள்ளியின் பெற்றோர் வீட்டுக்கு சென்றனர். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டி கிடந்தது. பின்னர் அவர்கள் வீட்டின் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனர். அங்கு வேதவள்ளி வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸ் உதவி கமிஷனர் சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தூக்குபோட்டு தற்கொலை செய்த வேதவள்ளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வேதவள்ளியின் பெற்றோர் மற்றும் தம்பியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனநலம் பாதித்த பெண் தனது குழந்தையை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story