மலேசியாவில் இருந்து வந்த ராமநாதபுரம் வாலிபருக்கு டெங்கு காய்ச்சல்


மலேசியாவில் இருந்து வந்த ராமநாதபுரம் வாலிபருக்கு டெங்கு காய்ச்சல்
x
தினத்தந்தி 18 Oct 2019 10:45 PM GMT (Updated: 18 Oct 2019 7:27 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 4 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மலேசியாவில் இருந்து காய்ச்சலுடன் வந்தவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏராளமானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே தெற்கு பெருவயலை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் வாலிபர் கோபிநாத் மற்றும் சின்ன ஏர்வாடி பி.எம். வலசை செல்வம் மகள் திவ்யா(வயது18) ஆகியோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உரிய சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பி உள்ளனர்.

மேலும் மஞ்சூர் வணங்கனேந்தல் பகுதியை சேர்ந்த பால்ராஜ் மனைவி பாண்டியம்மாள்(41) என்பவருக்கும், ராமநாதபுரம் லெட்சுமிபுரம் மணிகண்டன் மகள் சிவதர்ஷா(9) என்ற சிறுமியும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்ட ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டாக்டர்களின் தீவிர கண்காணிப்பு காரணமாக இவர்கள் இருவரும் தற்போது ரத்த தட்டு அணுக்கள் எண்ணிக்கை உயர்ந்து நலமுடன் உள்ளனர். இந்த நிலையில் சோழந்தூர் களவான்குடி பகுதியை சேர்ந்த ராஜு என்பவரின் மகன் பூசதுரை(24) என்பவர் மலேசியாவில் வேலை பார்த்து வந்த நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அங்கிருந்து உடனடியாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதன்பின்னர் அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது டெங்கு காய்ச்சல் இருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக அவர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன்பயனாக தற்போது வாலிபர் பூசதுரையின் ரத்த அணுக்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மலேசியாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்துள்ளதால் மலேசியாவிலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவது தெரியவந்துள்ளது.

தற்போது பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையின் தீவிர நடவடிக்கை மற்றும் முன்எச்சரிக்கையால் கொசுமருந்து தெளிப்பு, புகைமருந்து அடிப்பு, அபேட் மருந்து தெளிப்பு உள்ளிட்ட பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர் காய்ச்சல் உள்ள பகுதிகளில் டாக்டர்கள் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

Next Story