கொலையாளிகளுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கியது ஏன்? விளக்கம் அளிக்க விருதுநகர் நீதிபதிக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கொலையாளிகளுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கியது ஏன்? விளக்கம் அளிக்க விருதுநகர் நீதிபதிக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 Oct 2019 4:00 AM IST (Updated: 19 Oct 2019 1:00 AM IST)
t-max-icont-min-icon

கொலையாளிகளுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கியது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளிக்க விருதுநகர் நீதிபதிக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கல்யாணசுந்தரபுரத்தை சேர்ந்த ராஜமாணிக்கம், இவரது மகன் மாரிராஜ் மற்றும் ஜேசுராஜ் என்ற ஜேசுதாஸ், ஸ்டீபன் ஆகியோருக்கு ஒரு கொலை வழக்கில் 10 ஆண்டு மற்றும் 7 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி விருதுநகர் மாவட்ட செசன்சு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி, மேற்கண்ட 4 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். கொலை வழக்கில் குறைந்தபட்ச தண்டனையே ஆயுள் தண்டனைதான்.

கொலை வழக்குகளில் இதை விட குறைந்த அளவு தண்டனை கொடுக்கப்பட்டதில்லை.

அப்படியிருக்கும் போது கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு செசன்சு நீதிபதி ஒருவர் குறைந்த தண்டனை வழங்கியது ஆச்சரியமாக உள்ளது. இதுதொடர்பாக விருதுநகர் மாவட்ட செசன்சு நீதிபதி வருகிற 21-ந்தேதி விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Next Story