தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தியாகராயநகரில் பாதுகாப்புக்காக 500 போலீசார் குவிப்பு ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தியாகராயநகரில் பாதுகாப்புக்காக 500 போலீசார் குவிப்பு ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு
x
தினத்தந்தி 19 Oct 2019 5:00 AM IST (Updated: 19 Oct 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் தியாகராயநகரில் பாதுகாப்புக்காக 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்கு ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

சென்னை,

தீபாவளி பண்டிகை வருகிற 27-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு புத்தாடைகளும், நகைகளும் வாங்குவதற்காக சென்னை தியாகராயநகரில் மக்கள் தற்போதே கூட்டமாக வரத்தொடங்கி உள்ளனர். குறிப்பாக ரெங்கநாதன் தெருவில் மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இன்று(சனிக்கிழமை) முதல் தீபாவளி பண்டிகை முடியும் வரை தியாகராயநகர் பகுதியில் ரெங்கநாதன் தெரு, பாண்டிபஜார் மற்றும் மாம்பலம் ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் 500 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த போலீசார் தினமும் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள்.

தியாகராயநகர் பகுதியில் ஏற்கனவே 1,092 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக மேலும் 50 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

குற்றவாளிகளின் முகத்தை வைத்து அடையாளம் காணக்கூடிய 3 நவீன கேமராக்கள் ரெங்கநாதன் தெரு, மாம்பலம் ரெயில் நிலையம் அருகே உள்பட 3 இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன.

இதுதவிர 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கோபுரங்களில் இருந்து போலீசார் பைனாகுலர் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

இதுதவிர பிரத்யேகமாக கேமரா பொருத்தப்பட்ட ஆளில்லா 2 குட்டி விமானங்களும் (டிரோன்) தியாகராயநகர் பகுதியில் பறக்க விடப்பட்டுள்ளது. அதன் மூலம் அப்பகுதி முழுவதும் கண்காணிக்கப்படுகிறது. மேலும் கேமராக்கள் பொருத்தப்பட்ட ஜாக்கெட்டுகளும் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனை அணிந்துகொண்டு போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபடுவார்கள்.

புதிதாக தியாகராயநகரில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதனை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று திறந்து வைத்தார். கேமரா பொருத்தப்பட்ட ஆளில்லா குட்டி விமான இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார். அப்போது இணை கமிஷனர் சுதாகர் உள்பட பல்வேறு போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதேபோல் பாரிமுனை, புரசைவாக்கம், கோயம்பேடு மற்றும் அடையாறு ஆகிய பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Next Story