ஆடு மேய்க்க சென்ற விவசாயி வெட்டிக்கொலை


ஆடு மேய்க்க சென்ற விவசாயி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 19 Oct 2019 4:45 AM IST (Updated: 19 Oct 2019 3:08 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே ஆடு மேய்க்க சென்ற விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓசூர், 

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ளது நல்லூர் அக்ரஹாரம். இந்த பகுதியை சேர்ந்தவர் வெங்கடப்பா (வயது 65). விவசாயி. மேலும், இவர் 30 ஆடுகளை வளர்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று வெங்கடப்பா வழக்கம் போல ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றார். மாலை நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வெங்கடப்பாவின் குடும்பத்தினர் அவரை தேடி சென்றனர்.

அப்போது அருகில் உள்ள பேகேப்பள்ளி என்னும் கிராமத்தில் வனப்பகுதியையொட்டி ரத்த வெள்ளத்தில் வெங்கடப்பா பிணமாக கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் ஓசூர் சிப்காட் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கடப்பாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதற்கிடையே ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சியும் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டார். போலீசார் நடத்திய விசாரணையில், வெங்கடப்பாவை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வெங்கடப்பா எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடு மேய்க்க சென்ற போது விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஓசூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story