22 ஆண்டுகளுக்கு முன்பு போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர் இடைநீக்கம்
22 ஆண்டுகளுக்கு முன்பு போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து கரூர் மாவட்ட கல்வி அதிகாரி சிவராமன் நடவடிக்கை எடுத்தார்.
கரூர்,
கரூர் வெங்கமேட்டை சேர்ந்தவர் கண்ணன் (வயது 46). இவர், கரூர் அருகே உள்ள பெரியவடுகப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 1997-ம் ஆண்டு ஆசிரியராக பணிக்கு சேரும்போது, தன்னுடைய உண்மையான சாதியை குறிப்பிடாமல், வேறொரு சாதியை குறிப்பிட்டு போலி சாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் ஒருவர் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க ஆணையம் சார்பில் கரூர் மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பப் பட்டது.
இதைத்தொடர்ந்து கலெக்டர் அன்பழகன் உத்தரவின் பேரில், வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் ஆசிரியர் கண்ணன் போலி சாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது உறுதி படுத்தப்பட்டது. இதையடுத்து ஆசிரியர் கண்ணன் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கல்வி அதிகாரிக்கு, கலெக்டர் பரிந்துரைத்தார்.இதைத்தொடர்ந்து கல்வித்துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போலி சாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர் கண்ணனை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி சிவராமன் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.22 ஆண்டுகளுக்கு முன்பு போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது கரூர் மாவட்ட கல்வித்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story