நாங்குநேரி தொகுதியில் “தி.மு.க.வினரிடம் பணம் பறிமுதல் செய்ததில் உள்நோக்கம் உள்ளது” - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
“நாங்குநேரி தொகுதியில் தி.மு.க.வினரிடம் பணம் பறிமுதல் செய்ததில் உள்நோக்கம் உள்ளது“ என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். இதுபற்றி அவர் நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நெல்லை,
அ.தி.மு.க. அரசை 2021-ம் ஆண்டு அகற்றுவதற்கான முன்னோட்டமான தேர்தல் இந்த இடைத்தேர்தல் ஆகும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு தமிழ்நாட்டில் ஊழல், முறைகேடுகள், விதிமீறல்கள் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் மக்களுக்கு எதிரான திட்டங்கள் புகுத்தப்படுகிறது. ஒரே ரேஷன் கார்டு, ஒரே மொழி, ரெயில்வே பணிகளில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு மறுப்பு என தமிழக மக்களுக்கு எதிராக ஏராளமான திட்டங்களை புகுத்தி வருகின்றனர். ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்தபோது கல்வி கடன் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். இதன்மூலம் இந்திய மாணவர்கள், அமெரிக்க மாணவர்களுக்கு இணையாக வளர்ந்தனர். ஆனால், இப்போது அந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
மூலக்கரைப்பட்டி பகுதியில் தி.மு.க.வினரிடம் பணம் பறிமுதல் செய்ததில் உள்நோக்கம் உள்ளது. அங்கு ஆளுங்கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுத்து விட்டு, இவர்களை தூண்டி விட்டுள்ளனர். ஒரு எம்.எல்.ஏ. அறையில் ரூ.2 லட்சம் இருப்பது சாதாரண விஷயம்தான். நாங்குநேரி தொகுதியில் தங்கி இருக்கும் அமைச்சர்களின் அறைகளில் சோதனை போட்டால் பல கோடி ரூபாய் சிக்கும். இந்த விஷயத்தில் ஆளுங்கட்சியின் சூழ்ச்சி உள்ளது. காங்கிரஸ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பதை தடுக்கும் வகையிலும், மிரட்டும் வகையிலும் இவ்வாறு செயல்பட்டு உள்ளனர்.
நாங்குநேரி தொழில்நுட்ப பூங்காவுக்கு தி.மு.க. அரசு ரூ.700 கோடி பட்ஜெட்டில் அறிவித்தது, அவர்களது ஆட்சியில் ஓரளவுக்கு செயல்படுத்தினர். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க. அங்கு எதையும் செய்யவில்லை. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை கோரிக்கையில் நீதிமன்றம் உத்தரவிட்டால் ஏற்றுக் கொள்வோம். காவிரி பிரச்சினையில் காங்கிரஸ் துரோகம் செய்து விட்டதாகவும், ராகுல்காந்தி சொல்லாததை சொன்னதாகவும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசி உள்ளார். ராகுல் காந்தி அவ்வாறு பேசவில்லை. பேசியதாக நிரூபிக்க முடியாவிட்டால் ஓ.பன்னீர்செல்வம் பதவியை ராஜினாமா செய்வாரா?
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறையில் ரூ.3,500 கோடிக்கு டெண்டர் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து நீதிமன்றம் விசாரித்து அதில் உண்மை உள்ளது என்றும், அது தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ஆனால், சி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரத்திடம் காட்டும் கண்டிப்பை, எடப்பாடி பழனிசாமியிடம் காட்டவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது நாங்குநேரி தொகுதி வேட்பாளர் ரூபி மனோகரன், கே.வி.தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமி, வசந்தகுமார் எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், கோபண்ணா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story