புதிய மாவட்டம் உருவாக்க வலியுறுத்தி அரக்கோணத்தில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்


புதிய மாவட்டம் உருவாக்க வலியுறுத்தி அரக்கோணத்தில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
x
தினத்தந்தி 19 Oct 2019 4:15 AM IST (Updated: 19 Oct 2019 3:10 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வலியுறுத்தி கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்றது. கொடிகளை போலீசார் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரக்கோணம், 

வேலூர் மாவட்டத்தை 3 ஆக பிரித்து வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய நகரங்களை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதை கண்டித்து அரக்கோணம் நகரில் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடையடைப்பு, மனித சங்கிலி போராட்டம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்தது.

இந்த நிலையில் நேற்று அரக்கோணம் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அரக்கோணம் நகரம் முழுவதும் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். அதற்காக நேற்று காலை அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் பகுதியில் இருந்து நகரம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கருப்பு கொடி கட்டி வைத்திருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் டவுன் போலீசார் அரக்கோணம் நகரில் கட்டி வைத்திருந்த கருப்பு கொடிகளை அகற்றினார்கள். இதனால் ஆத்திரமடைந்த அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் போலீசாரிடம் ஏன் கொடிகளை அகற்றுகிறீர்கள் என்று கேட்டனர். அப்போது போலீசாருக்கும், கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கொடிகள் கட்டப்பட்டு இருந்ததால் அகற்றி உள்ளோம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் அரக்கோணம் நகரில் எங்கும் கருப்பு கொடி கட்ட விடாமல் தடுக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பின்னர் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கே.எம்.தேவராஜ், நைனாமாசிலாமணி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் காலை 10 மணிக்கு அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து கருப்பு கொடியை அகற்றிய போலீசாருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கே.எம்.தேவராஜ், நைனாமாசிலாமணி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:- அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகிறோம். யாருமே எதிர்பார்க்காத வகையில் ராணிப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது.

அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வலியுறுத்தி நாங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். தற்போது கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்த விடாமல் போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர். இது மிகவும் கண்டனத்திற்குரிய செயல் ஆகும். எதை தடுத்தாலும் எங்கள் கோரிக்கையில் இருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம். அரக்கோணத்தை தனி மாவட்டமாக்கும் வரை உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

போராட்டத்தில் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story