முத்தூர், நத்தக்காடையூர் பகுதிகளில் தொடர்மழை காரணமாக ஓடை, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு


முத்தூர், நத்தக்காடையூர் பகுதிகளில் தொடர்மழை காரணமாக ஓடை, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 18 Oct 2019 10:15 PM GMT (Updated: 18 Oct 2019 10:00 PM GMT)

முத்தூர், நத்தக்காடையூர் பகுதிகளில் தொடர் மழை காரணமாக அந்த பகுதியில் உள்ள ஓடை, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

முத்தூர்,

முத்தூர், நத்தக்காடையூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில காலமாக கடும் வெயில் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 1 மாதமாக சீதோஷ்ண நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக மழைக்காலமும், குளிர்காலமும் தொடங்கியுள்ளது. இதன்படி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இப்பகுதிகளில் அவ்வப்போது மிதமான, சாரல், பலத்த மழை பெய்து வருகிறது.

மேலும் இப்பகுதி கீழ்பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்தில் நஞ்சை சம்பா நெல் சாகுபடி செய்வதற்கு கடந்த ஆகஸ்டு மாதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதனால் இப்பகுதியில் கீழ்பவானி பாசன தண்ணீரை பயன்படுத்தி நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்காக நெல் நாற்று நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இப்பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தினந்தோறும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மற்றும் பலத்த மழை பெய்து வருகிறது. இப்பகுதிகளில் பெய்த தொடர் மழையால் கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இதனால் இப்பகுதிகளில் உள்ள நகர மற்றும் கிராம மக்களின் குடிநீர் ஆதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கிராமப்பகுதிகளில் உள்ள குளங்கள், ஓடைகள், ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன்படி கிராம மக்களின் குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்தவும், விவசாய பணிகள் தொய்வின்றி நடைபெறவும் தேசிய வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மற்றும் பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரப்பட்டுள்ள குளங்களில் தண்ணீர் தேங்கியும், ஓடைகளில் தண்ணீர் நிரம்பி வழிந்தும் வருகிறது. மேலும் இப்பகுதிகளில் கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் 50 மி.மீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story