நாங்குநேரி தொகுதியில் பணப்பட்டுவாடா: தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு


நாங்குநேரி தொகுதியில் பணப்பட்டுவாடா: தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 18 Oct 2019 10:45 PM GMT (Updated: 18 Oct 2019 10:46 PM GMT)

நாங்குநேரி தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ய முயன்றதாக, தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும், தி.மு.க. எம்.எல்.ஏ. மீது தாக்குதல் நடத்தியதாக 25 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இட்டமொழி,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பெரியகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான சரவணக்குமார் தனது ஆதரவாளர்களுடன் பிரசாரம் செய்து வந்தார். இதற்காக மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அம்பலம் பகுதியில் மாரியப்பன் என்பவரின் வீட்டில் தங்கியிருந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாரியப்பன் வீட்டில் வைத்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக கீழஅரியகுளம், கல்லத்தி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கிராமமக்கள் அங்கு திரண்டனர். அங்கிருந்த தி.மு.க.வினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, சரவணக்குமார் எம்.எல்.ஏ. உள்பட 4 பேரையும் கிராமமக்கள் தாக்கி, வீட்டில் பூட்டி சிறைவைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டின் கதவை திறந்து 4 பேரையும் வெளியே அழைத்து வந்தனர். மேலும், அங்கிருந்து ரூ.2.78 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கிராமமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த அவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பின்னர் இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சரவணக்குமார் எம்.எல்.ஏ. உள்பட தி.மு.க.வினர் 6 பேர் மீது நாங்குநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் துரை நேற்று வழக்குப்பதிவு செய்தார். அவர்கள் மீது ஜனநாயகத்துக்கு விரோதமாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே, சரவணக்குமார் எம்.எல்.ஏ. தாக்கப்பட்டது குறித்து நாங்குநேரி ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுடலைக்கண்ணு மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் மனு அளித்தார். அதில், “சரவணக்குமார் எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களுடன் அம்பலம் பகுதியில் உள்ள வீட்டில் மதியம் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது, கீழஅரியகுளம், கல்லத்தி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கிராமமக்கள் கதவை தட்டினார்கள். கதவை திறந்த உடன் கிராமமக்கள் உள்ளே புகுந்து சரவணக்குமார் எம்.எல்.ஏ. உள்பட 4 பேரையும் சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும் தங்கள் செலவுக்கு வைத்து இருந்த ரூ.2 லட்சம் மற்றும் தங்கசங்கிலி, மோதிரம், 3 செல்போன்கள் ஆகியவற்றையும் அவர்கள் பறித்துச் சென்று விட்டனர். எனவே எம்.எல்.ஏ.வை தாக்கிய கிராமமக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களிடம் இருந்து பறித்து சென்ற பணம், தங்க நகைகள் மற்றும் பொருட்களை மீட்டு தர வேண்டும்“ என்று கூறப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், தேர்தல் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன் ஆகியோர் விசாரணை நடத்தினர். மேலும் எம்.எல்.ஏ. உள்பட 4 பேரை தாக்கியதாக கீழஅரியகுளம், கல்லத்தி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story