மும்பை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் அரசு நீதி வழங்கவில்லை; பிரதமர் மோடி குற்றச்சாட்டு


மும்பை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் அரசு நீதி வழங்கவில்லை; பிரதமர் மோடி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 Oct 2019 11:29 PM GMT (Updated: 18 Oct 2019 11:29 PM GMT)

மும்பை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்போதைய காங்கிரஸ் அரசு நீதி வழங்கவில்லை என பாந்திராவில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலை முன்னிட்டு பா.ஜனதா, சிவசேனா, இந்திய குடியரசு கட்சி ஆகிய கூட்டணி கட்சிகள் சார்பில் பிரசார பொதுக்கூட்டம் பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நேற்று இரவு நடந்தது.

இதில், பிரதமர் நரேந்திர மோடி, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே, இந்திய குடியரசு கட்சி தலைவர் ராம்தாஸ் அத்வாலே ஆகியோர் ஒரே மேடையில் தோன்றினர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காயங்களை நாம் மறக்க முடியாது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அப்போதைய காங்கிரஸ் அரசு எந்த நீதியும் வழங்கவில்லை.

எல்லை தாண்டிய இந்த தாக்குதல் நடத்தப்பட்டதற்கான அனைத்து சாட்சிகளும் இருந்தபோதும், இந்த நிகழ்விற்கு காரணமாக காங்கிரஸ் ஆட்சி உள்ளூர் நபர்களை கைக்காட்டி கொண்டிருந்தது. ஆனால் முந்தைய அரசு ஊழல்வாதிகளின் கனவுகளை நிறைவேற்ற உழைத்தது.

கடந்த 5 ஆண்டுகளாக பா.ஜனதா அரசு ஏழை, எளிய மக்களுக்காக பாடுபட்டு வருகிறது. அனைவருக்கும் வீடு, இலவச சமையல் கியாஸ், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இவற்றுக்கும் மேலாக ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு போன்ற திட்டங்கள் பா.ஜனதா ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. மும்பைவாசிகளின் வசதிக்காக மெட்ரோ ரெயில், நவிமும்பை விமான நிலையம், மின்சார ரெயில் விரிவாக்கம் போன்ற திட்டங்கள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

மராட்டியத்தில் ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்துக்காக மீண்டும் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜனதா அரசை உருவாக்க நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே பேசுகையில், பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் வீர சாவர்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கவும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு பா.ஜனதா அரசு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என நம்பிக்கையுடன் உள்ளோம் என்று தெரிவித்தார்.

Next Story