சித்தராமையா வசிக்கும் காவேரி பங்களா, எடியூரப்பாவுக்கு ஒதுக்கீடு


சித்தராமையா வசிக்கும் காவேரி பங்களா, எடியூரப்பாவுக்கு ஒதுக்கீடு
x
தினத்தந்தி 18 Oct 2019 11:42 PM GMT (Updated: 18 Oct 2019 11:42 PM GMT)

எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வசித்து வரும் காவேரி பங்களா, முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

பெங்களூரு, 

கர்நாடக முதல்-மந்திரியாக சித்தராமையா கடந்த 2013-ம் ஆண்டு பதவி ஏற்றார். அப்போது அவர் மாநில அரசுக்கு சொந்தமான குமரகிருபா ரோட்டில் உள்ள காவேரி பங்களாவுக்கு குடியேறினார். அதன் பிறகு கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தனது ஆட்சியை பறிகொடுத்தது.

இதையடுத்து சித்தராமையா அரசு பங்களாவை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைத்தன. காவேரி இல்லம், தொழில்துறை மந்திரியாக இருந்த கே.ஜே.ஜார்ஜுக்கு ஒதுக்கப்பட்டது.

தனக்கு ஒதுக்கப்பட்ட அந்த காவேரி பங்களாவை கே.ஜே.ஜார்ஜ், சித்தராமையாவுக்கு வழங்கினார். அதனால் சித்தராமையா அந்த பங்களாவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சித்தராமையா தற்போது எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் பதவி, கேபினட் மந்திரி பதவிக்கு இணையான அந்தஸ்து கொண்டது. அரசு பங்களா உள்பட அனைத்து வசதிகளும் எதிர்க்கட்சி தலைவருக்கு அரசு சார்பில் செய்து கொடுக்கப்படுகிறது.

அதன் அடிப்படையில் சித்தராமையா, காவேரி பங்களாவை தனக்கு ஒதுக்குமாறு கோரி மாநில அரசுக்கு கடிதம் எழுதினார். ஆனால் மாநில அரசு, காவேரி பங்களா முதல்-மந்திரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சி தலைவருக்கு ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள அரசு இல்லம் எண்-2 ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

இதையடுத்து சித்தராமையா காவேரி பங்களாவை காலி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.


Next Story