தீபாவளியையொட்டி பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு 1,600 சிறப்பு பஸ்கள்
தீபாவளியையொட்டி பெங்களூருவில் இருந்து தமிழகம் உள்பட பல்வேறு இடங்களுக்கு 1,600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
பெங்களூரு,
வருகிற 27-ந் தேதி தீபாவளி பண்டிகையும், 29-ந் தேதி பாலிபட்யாமி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. இதனால் ஏராளமானவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர். இதன் காரணமாக கர்நாடக அரசின் சாலை போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) சார்பில் 1,600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி, வருகிற 25, 26 மற்றும் 27-ந் தேதிகளில் பெங்களூருவில் இருந்து தமிழகம் உள்பட பல்வேறு இடங்களுக்கும், வருகிற 29-ந் தேதி கர்நாடகத்தின் பிற பகுதிகளில் இருந்தும், தமிழகத்தில் இருந்தும் பெங்களூரு நோக்கி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி பெங்களூரு கெம்பேகவுடா பஸ் நிலையம், மைசூரு ரோடு பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து தர்மஸ்தலா, குக்கே சுப்பிரமணியா, சிருங்கேரி, ஒரநாடு, தார்வார், பெலகாவி, விஜயாப்புரா, கார்வார், பல்லாரி, ஒசப்பேட்டே, கலபுரகி, ராய்ச்சூர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயங்க இருக்கின்றன.
சாந்தி நகர் பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தில் உள்ள மதுரை, கும்பகோணம், திருச்சி, சென்னை, கோயம்புத்தூர் உள்பட பிற இடங்களுக்கும் சிறப்பு பஸ்கள் செல்ல உள்ளன. அத்துடன் இந்த பஸ் நிலையத்தில் இருந்து ஐதராபாத், திருப்பதி, விஜயவாடா, உள்ளிட்ட நகரங்களுக்கும், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளா மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
விஜயநகர், ஜெயநகர் 4-வது பிளாக், ஜாலஹள்ளி கிராஸ், நவரங் (ராஜாஜிநகர்), மல்லேசுவரம் 18-வது கிராஸ், பனசங்கரி, ஜீவன்பீமாநகர், ஐ.டி.ஐ. கேட், கங்காநகர், கெங்கேரி சேட்டிலைட் டவுன் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயங்க உள்ளன. அதன்படி கர்நாடகத்தின் பிற இடங்களுக்கும், திருப்பதிக்கும் பஸ்கள் செல்ல உள்ளன.
மேலும், 4 அல்லது அதற்கு அதிகமான பயணிகள் சேர்ந்து ஒரே டிக்கெட்டில் முன்பதிவு செய்தால் டிக்கெட் கட்டணத்தில் 5 சதவீதமும், ஒரு இடத்தில் இருந்து சென்று மீண்டும் திரும்பி வருவதற்கு ஒரே நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தால் டிக்கெட் கட்டணத்தில் 10 சதவீதமும் சலுகை வழங்கப்படுகிறது. மேலும், பயணிகள் முன்பதிவு மையங்கள் வழியாகவும்,www.ksrtc.inஎன்ற இணையதளம் வழியாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
மேற்கண்ட தகவல் கே.எஸ்.ஆர்.டி.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story