‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் 2 மாணவர்கள் உள்பட 5 பேரின் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு


‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் 2 மாணவர்கள் உள்பட 5 பேரின் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 20 Oct 2019 4:30 AM IST (Updated: 20 Oct 2019 12:12 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் 2 மாணவர்கள் உள்பட 5 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தேனி,

‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. கைதான மாணவர் உதித்சூர்யாவுக்கு மதுரை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், வாணியம்பாடியை சேர்ந்த மாணவன் இர்பானின் தந்தை முகமது ‌‌ஷபிக்கு ஜாமீன் கேட்டு கடந்த 14-ந்தேதி தேனி மாவட்ட செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை 19-ந்தேதிக்கு (நேற்று) ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று இந்த மனு மாவட்ட மகளிர் கோர்ட்டு நீதிபதி கீதா முன்னிலையில் விசா ரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இந்த மனுவின் மீதான விசாரணையை நாளை(திங்கட்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

அதுபோல், இந்த வழக்கில் கைதான மாணவர் பிரவீண், அவருடைய தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவருடைய தந்தை டேவிஸ் ஆகிய 4 பேரின் ஜாமீன் மனுக்களும் மாவட்ட மகளிர் கோர்ட்டு நீதிபதி கீதா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணையையும் நாளை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த 5 பேரின் ஜாமீன் மனுக்களோடு, இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள மாணவி பிரியங்கா, அவருடைய தாயார் மைனாவதி ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணையும் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.

Next Story