ஆட்சியை தூக்கி எறிய தொடக்க புள்ளி தான் இந்த இடைத்தேர்தல்: அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது - மு.க.ஸ்டாலின்


ஆட்சியை தூக்கி எறிய தொடக்க புள்ளி தான் இந்த இடைத்தேர்தல்: அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 20 Oct 2019 5:00 AM IST (Updated: 20 Oct 2019 1:02 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்ட நிலையில், இந்த ஆட்சியை தூக்கி எறிவதற்கான தொடக்கப்புள்ளிதான் இந்த இடைத்தேர்தல் என்று விக்கிரவாண்டியில் நடந்த இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

விக்கிரவாண்டி,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். திருமாத்தூர், ஒரத்தூர், முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் சென்ற படி பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார். இறுதியாக விக்கிரவாண்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்திற்கு மத்தியில் இருந்து வரும் உத்தரவை மட்டுமல்லாமல், அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை அப்படியே செய்கிற ஆட்சி தான் நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்திற்கு தீங்கு இழைக்கும், மாநிலத்தின் சுயமரியாதை பறிக்கப்படுகிற சூழ்நிலை என்ற எதை பற்றியும் கவலைப்படாமல் எடப்பாடி பழனிசாமி கையை கட்டிக்கொண்டு ஒரு அடிமை ஆட்சியை நடத்தி கொண்டு இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் தான் 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

நான் இந்த தொகுதிகளில் இடைவிடாமல் பிரசாரத்தில் ஈடுபட்டேன், அப்போது மக்கள் உணர்வை பார்த்ததன் மூலம், 3 தொகுதிகளிலும் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ராதாபுரம் தொகுதியும் நமது கைக்கு விரைவில் வரப்போகிறது என்கிற செய்தியும் வரப்போகிறது. இந்த ஆட்சியை தூக்கி எறிவதற்கான ஒரு தொடக்க புள்ளி தான் இந்த இடைத்தேர்தல்.

தமிழகத்தில் ஒரு ஆட்சி இருக்கிறது. அந்த ஆட்சி நடக்கிறதா, முதல்-அமைச்சர் இருக்கிறாரா? அமைச்சரவை செயல்படுகிறதா? என்றால் இல்லை. அதனால் தான் கோட்டையில் உட்கார்ந்து கொள்ளையடித்து கொண்டு இருக்கிற ஆட்சியை நடத்துகிறார்கள். இவர்களது அமைச்சரவையை ஊழல் வாதிகள், உதவாக்கரைகள் என்கிற அடிப்படையில் 2 ஆக பிரிக்கலாம். அந்த பட்டியலில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. யார் யார் ஊழல் வாதிகள், உதவாக்கரைகள் என்று உங்களுக்கு தெரியும்.

8 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில், தமிழகம் பின்னோக்கி போய் கொண்டு இருக்கிறது. அதாவது 25 ஆண்டுகாலம் தமிழகம் பின்னோக்கி சென்றுவிட்டது. இதை மீட்க தான் போராடிக் கொண்டு இருக்கிறோம். முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் இடைத்தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள். அந்த பிரசாரத்தில் 8 ஆண்டில் இந்த திட்டங்களை கொண்டு வந்துள்ளோம், சாதனைகளை படைத்துள்ளோம் என்று வரிசைப்படுத்தி சொல்லக்கூடிய ஆற்றல் அவர்களிடம் இருக்கிறதா?.

ஜெயலலிதாவின் மரணமே மர்ம மரணமாகி விட்டது. இதை மக்களிடம் தெளிவாக சொல்லி, அவர்கள் புரிந்து கொண்டு இருக்கின்றனர். அதை திசை திருப்புவதற்காக திட்டமிட்டு எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மறைவுக்கு தி.மு.க. தான் காரணம் என்கிறார். ஜெயலலிதா மீது 1996-ம் ஆண்டு சுப்பிரமணியசாமி தான் வழக்கை போட்டார். தி.மு.க. போடவில்லை. இதை மூடி மறைத்து, திசைத்திருப்பி எடப்பாடி பழனிசாமி சொல்கிறார் என்றால் அதற்கு காரணம் என்ன? என்பதை சிந்தித்து பாருங்கள்.

ஜெயலலிதா ஓய்வெடுக்க செல்லும் கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளை உங்களுக்கு தெரியும். இதுபற்றி நான் பேசக்கூடாது என்று உச்சநீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்கி வைத்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தீர்கள். அதனால் என்ன பயன் என்கிறார்கள். தபால் துறையில் இந்தியை திணிக்க முயன்ற போது அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தது நமது எம்.பி.க்கள் தான், ரெயில்வே யில் தமிழ் இருக்க கூடாது என்று வந்த போதும், அமித்ஷா இந்தி தான் நாட்டின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்ற போதும் அதை எதிர்த்து குரல் கொடுத்தது தி.மு.க.தான்.

ஆர்ப்பாட்டமும் அறிவித்தோம். ஆனால், தமிழக கவர்னர் உடனடியாக அழைத்து பேசி, விரும்புகிறவர்கள் படித்தால் போதும் என்று அவர் சொல்லிவிட்டதாக சொன்னார். அந்த கோரிக்கையை ஏற்று ஆர்ப்பாட்டத்தை திரும்ப பெற்றோம். எனவே ஆட்சி மொழியாக்குவதை திரும்ப பெற வைத்த இயக்கம் தான் தி.மு.க. என்பதை மறந்துவிடாதீர்கள்.

தமிழகம் அமைதியாக இருப்பதினால் தான், சீன தலைவரை நமது பிரதமர் தமிழகம் அழைத்து வந்து மரத்தடியில் அமர்ந்து பேசினார் என்கிறார். பெரிய பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தமிழக மற்றும் மத்திய அரசு, சீனாவை சேர்ந்தவர்கள் வந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். இதை நாங்கள் விமர்சிக்கவில்லை. அதே நேரத்தில் தமிழகத்தில் என்ன நிலை என்பது என்று தெரியும். ஊழல் எங்கும், தலைவிரித்தாடுகிறது.

வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு, இந்த சமுதாயத்துக்காக பாடுபட்ட கோவிந்தசாமிக்கு மணிமண்டபத்தையும் நிச்சயமாக உறுதியாக அமைப்போம். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல் அறிவிப்பாக நிறைவேற்றுவோம். நம்மை எதிர்க்கும் ஆளும் கட்சிக்கு பா.ஜனதா, பா.ம.க. துணை நிற்கிறது.

ஆனால் அ.தி.மு.க. மீது ஏற்கனவே கவர்னராக ரோசய்யா இருந்த போது அன்புமணி ராமதாஸ் 18 ஊழல் பட்டியல்களை கொடுத்தார். பின்னர் தற்போது உள்ள கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் 24 புகார்கள் கொண்ட பட்டியலை அவர்களது அ.தி.மு.க. கூட்டணி கட்சியில் இளைஞரணி தலைவராக உள்ள டாக்டர் அன்புமணி ராமதாஸ் கொண்டு போய் கொடுத்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 100-க்கு 100 எப்படி தோல்வியை கொடுத்தார்களோ அதுபோன்ற தோல்வியை தர மக்கள் தயாராக உள்ளனர். நமது வேட்பாளர் புகழேந்தியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு பேசுகையில், தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடந்து வருகிறது. மத்தியிலும் மக்களுக்கு எதிராக செயல்படுகிற ஒரு ஆட்சி நடக்கிறது. இதனால் தமிழகம் எல்லா துறைகளிலும் சின்னாபின்னமாகி இருக்கும் நிலையில் இந்த தேர்தல் வந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு மீண்டும் பொன்னாட்சி வேண்டும் என்கிற நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக விக்கிரவாண்டியில் புகழேந்திக்கு வாக்களித்து, தமிழகம் மு.க.ஸ்டாலினின் தலைமையை எதிர்பார்க்கிறது என்பதை சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் பேசினார்.

தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் பேசுகையில், தி.மு.க. ஒரு அரசியல் கட்சி அல்ல. அது ஒரு கம்பெனி என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார். தி.மு.க. நேற்று முளைத்த காளான் அல்ல, நீங்கள் (முதல்- அமைச்சர்) முளைப்பதற்கு முன்பே முளைத்துள்ள கட்சி. இந்த கட்சி தொடங்கிய போதே அண்ணா அவர்கள் ஜனநாயக முறைப்படி கிளை, ஒன்றியம், மாவட்டம், பொதுக்குழு, செயற்குழு தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் மூலம் தலைவரை தேர்ந்தெடுக்கிற கட்சி இது. உங்கள் கட்சி தான் கார்ப்பரேட் கட்சி. அரசியலும், நிர்வாகமும் தெரியாத நீங்கள் எங்கள் தலைவரை பார்த்து சொல்வதா?. டாக்டர் அன்புமணி கரியை பூசுவோம் என்கிறார். தர்மபுரியில் என்ன நடந்தது என்று தெரியாதா?. நீங்கள் எங்களை விட்டு என்று சென்றீர்களோ அன்றோடு உங்களது சகாப்தம் முடிந்தது என்றார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் திருச்சி ஏ.வ.வேலு, விழுப்புரம் பொன்முடி, செஞ்சி மஸ்தான், கடலூர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கணேசன், முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா எம்.பி., தேர்தல் பணிக்குழு செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன், விக்கிரவாண்டி தி.மு.க. நகர செயலாளர் நைனா முகமது, மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story