டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த 4 தனியார் பள்ளிகளுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்
தர்மபுரி மாவட்டத்தில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த 4 தனியார் பள்ளிகளுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும், டெங்கு கொசுக்கள் உற்பத்தியை கண்டறிந்து தடுக்கவும் கலெக்டர் மலர்விழி உத்தரவுப்படி பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பூச்சியியல் வல்லுனர்கள் அடங்கிய குழுவினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.. இதன் ஒரு பகுதியாக மொரப்பூர், கம்பைநல்லூர் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.
இந்த ஆய்வின்போது ஒரு தனியார் பள்ளியில் டெங்கு காய்ச்சலை பரப்புவதற்கு காரணமான ஏடிஸ் கொசுப்புழு கழிவறையில் உள்ள சிமெண்டு தொட்டிகள் மற்றும் பள்ளியின் மேற்கூரை பகுதியில் இருப்பதும், மேலும் 3 தனியார் பள்ளிகளில் டெங்கு கொசுப்புழுக்கள் பரவுவதற்கான சூழல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த 4 பள்ளிகளுக்கும் மொத்தம் ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் டெங்கு கொசுக்கள் பரவுவதற்கான சூழல் உள்ள இடங்களை கண்டறிய அனைத்து பகுதிகளிலும் ஆய்வுக்குழுவினர் தொடர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் கொசுக்கள், கொசுப்புழுக்கள் உற்பத்தி ஆகாத வகையில் சுற்றுப்புறத்தை தூய்மையான முறையில் பராமரிக்க வேண்டும்.
சுகாதார குழுவினர் ஆய்வு நடத்தும்போது சுகாதார சீர்கேடு கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story