பென்னாகரம் அருகே, டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி
பென்னாகரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியானான். கிராமத்தில் சுகாதார வசதி ஏற்படுத்த கோரி பொதுமக்கள் மாணவனின் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பென்னாகரம்,
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கள்ளிபுரத்தை சேர்ந்தவர் சரவணன், கூலித்தொழிலாளி. இவருடைய மகன் அவினாஷ் (வயது9). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். மாணவனுக்கு கடந்த ஒருவாரத்திற்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் பெற்றோர் அவனை பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு மாணவனை பரிசோதித்தபோது டெங்கு காய்ச்சல் பாதித்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவனை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை அவினாஷ் பரிதாபமாக இறந்தான். இதையடுத்து அவனது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று பொதுமக்கள் மாணவனின் உடலை பென்னாகரத்தில் மேச்சேரி பிரிவு சாலையில் வைத்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் சதாசிவம், உதவி கலெக்டர் ஆர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு மேகலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிகண்டன், தண்டபாணி மற்றும் மருத்துவ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கள்ளிபுரம் கிராமத்தில் மழைநீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் பொதுமக்களுக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு மாணவனின் உடலை எடுத்து சென்றனர்.
இதையடுத்து அதிகாரிகள் கள்ளிபுரம் கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.
டெங்கு காய்ச்சலால் இறந்த மாணவனின் உடலை சாலையில் வைத்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story