கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.25 கோடி கொடுத்து பா.ஜனதாவுக்கு இழுத்தார்; எடியூரப்பா மீது சித்தராமையா குற்றச்சாட்டு
கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.25 கோடி கொடுத்து பா.ஜனதாவுக்கு இழுத்தார் என்று எடியூரப்பா மீது சித்தராமையா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
மைசூரு,
சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக நேற்று அவர் மைசூருவுக்கு சென்றார். அவருக்கு மைசூரு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் திறந்தவாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது மேளதாளம் முழங்க, பல்வேறு கலைக்குழுவினரும் நடனமாடிய படி வந்தனர். இந்த ஊர்வலம் மைசூரு ரெயில் நிலையம் அருகில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.
பின்னர் அங்கு சித்தராமையாவுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் கலந்துகொண்டு சித்தராமையா பேசியதாவது:-
கடந்த 2018-ம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ் மேலிட உத்தரவின் பேரில் நாம், ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தோம். இதை சகித்துக்கொள்ள முடியாத எடியூரப்பா, ஆபரேஷன் தாமரை மூலம் குதிரை பேரம் நடத்தி கூட்டணி ஆட்சியை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா பக்கம் இழுத்துள்ளார். அதன் மூலம் எடியூரப்பா மீண்டும் கர்நாடகத்தின் முதல்-மந்திரியாகி உள்ளார். கூட்டணி கட்சியை சேர்ந்த ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் தலா ரூ.25 கோடி கொடுக்கப்பட்டு உள்ளது.
பணம் பெற்றுக்கொண்டு கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் 17 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்யும்படி சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தோம். அதன்படி அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதை எதிர்த்து அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கு வருகிற 22-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. அவர்களுக்கு என்ன தீர்ப்பு வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். நான் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாகி மக்களுக்கான நலத்திட்டங்களை அமல்படுத்தினேன்.
சாமுண்டீஸ்வரி தொகுதியில் கடந்த சட்டசபை தேர்தலின் போது நான் 35 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி தழுவினேன். தேர்தலின் போது எல்லோரும் என்னிடம் கவலைப்பட தேவையில்லை. நீங்கள் தான் வெற்றி பெறுவீர்கள் என்று கூறினார்கள். ஆனால் எதற்காக அவர்கள் பொய் கூறினார்கள் என்று தெரியவில்லை. நான் சாமுண்டீஸ்வரி தொகுதியில் முதன் முறையாக போட்டியிட்ட போது என்னிடம் பணம் இல்லை. ஆனால் மக்கள் என் பக்கம் இருந்தனர். அவர்கள் அளித்த ஆதரவால் நான் வெற்றி பெற்றேன். பணம் இருந்தும் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியில் தோல்வி அடைந்துவிட்டேன். பணத்தால் யாரும் தேர்தலில் வெற்றி பெற முடியாது.
சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட்ட சுமலதா வெற்றி பெற்றார். அந்த வெற்றி அவருக்கு பணத்தால் கிடைக்கவில்லை. அந்த மாவட்ட மக்களின் அன்பு, பாசத்தால் அவருக்கு இந்த வெற்றி கிடைத்துள்ளது. நான் தற்போது மாநிலம் முழுவதும் சுற்றி வருகிறேன். அனைத்து பகுதி மக்களும், நாங்கள் பா.ஜனதாவுக்கு வாக்களித்து தவறு செய்துவிட்டோம் என்று என்னிடம் கூறினார்கள்.
இவ்வாறு அவர் பேசினார். அதைதொடர்ந்து அவருக்கு பிரமாண்ட மாலை அணிவித்து, பசவண்ணரின் சிறிய சிலை நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
கூட்டத்தில், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், எம்.எல்.ஏ.க்கள் யதீந்திரா சித்தராமையா, தன்வீர்சேட், உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story