கவர்னர் கிரண்பெடி மீதான மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையானவை - நாராயணசாமி விளக்கம்


கவர்னர் கிரண்பெடி மீதான மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையானவை - நாராயணசாமி விளக்கம்
x
தினத்தந்தி 20 Oct 2019 5:00 AM IST (Updated: 20 Oct 2019 4:47 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மாநில தீவு தொடர்பாக கவர்னர் கிரண்பெடி மீது மு.க.ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையானவை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி விளக்கம் அளித்தார்.

புதுச்சேரி,

காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் சாமிப்பிள்ளைதோட்டத்தில் மோட்டார் சைக்கிள் பிரசாரம் நேற்று காலை தொடங்கியது. பகல் 12.30 மணி அளவில் வெங்கடேஸ்வரா நகரில் பிரசாரத்தை முடித்துக்கொண்டனர். அப்போது முதல் அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

காமராஜ் நகரில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் 13 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபட்டோம். மக்கள் எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். எங்கள் வேட்பாளர் ஜான்குமார் வெற்றிபெறுவது உறுதியாகி உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி எங்கள் ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்று பிரசாரம் செய்து வருகிறார்.

அவர் தனது எதிர்க்கட்சி தலைவர் பணியை சரியாக செய்யவில்லை. எதிரிக்கட்சி போன்று வேலை செய்கிறார். சட்டமன்றத்துக்கு வந்து மக்கள் பிரச்சினைகளை பேச தயாரில்லை. அவரது ஆட்சியின்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை மத்திய அரசு நிராகரித்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் ஸ்மார்ட் சிட்டி திட்டம், குடிநீர் திட்டம், சுற்றுலா மேம்பாட்டு திட்டம், சாகர்மாலா திட்டம் போன்றவற்றை பெற்று செயல்படுத்தி வருகிறோம். புதுவை மாநிலம் சிறப்பாக உள்ளதைநிரூபித்துஉள்ளோம்.

இவை எல்லாம் தெரிந்தும் எங்கள் அரசை செயல்படாத அரசு என்ற கூறுகிறார். அவரது ஆட்சிக்காலத்தில் முதியோர், விதவை உதவித்தொகை, சென்டாக் நிதி போன்றவை காலத்தோடு தரப்படவில்லை. ஆனால் நாங்கள் அவற்றை உரிய காலத்தில் வழங்கி வருகிறோம். அனைத்து ரேசன்கார்டுகளுக்கும் 20 கிலோ இலவச அரிசி தருவோம் என்றோம்.

ஆனால் அதற்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புக்கொள்ளவில்லை. இதுதொடர்பாக உள்துறை செயலாளரை சந்தித்து புகார் தெரிவித்துள்ளோம். இலவச அரிசி வழங்க உணவுத்துறை மந்திரி ராம்விலாஸ் பாஸ்வான் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த கவர்னர் திட்டங்களை தடுக்கிறார்.

புதுவையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது புதுவை அரசு செயல்படுத்தும் திட்டங்களை பட்டியலிட்டார். புதுவை அரசின் திட்டங்களை கவர்னர் கிரண்பெடி முடக்குவதாக கூறினார். கிரண்பெடியின் செயல்பாடுகளை கண்டித்து முதன்முதலில் ராகுல்காந்தி குரல் கொடுத்தார். அடுத்த படியாக தமிழகத்தில் இருந்து மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்தார். கவர்னர் கிரண்பெடியை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கவர்னருக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தியபோது புதுவை வந்து எங்களுக்கு ஆதரவு தந்தார். தேர்தல் பிரசாரத்தின்போது புதுவை மாநிலத்துக்கு சொந்தமான ஏனாம் அருகில் உள்ள தீவு-5ஐ ஆந்திராவுக்கு தாரை வார்க்க கவர்னர் நடவடிக்கை எடுக்கிறார் என்று குற்றஞ்சாட்டினார். அந்த குற்றச்சாட்டு முற்றிலும் உண்மையானது. அந்த தீவு புதுவை மாநிலத்துக்கு சொந்தமானது.

ஆனால் அந்த தீவு ஆந்திர மாநிலத்துக்கு சொந்தமானது என்று ஒரு காண்டிராக்டர் வழக்குப்போட்டுள்ளார். அந்த தீவில் சுற்றுலா பணிகளை மேற்கொள்ள ரங்கசாமி முதல்-அமைச்சராக இருந்த 2015-ல் திட்டமிடப்பட்டது. அப்போது அங்கு கட்டிட பணிகளை மேற்கொள்ளவும் ஒப்புதல் பெறப்பட்டது. இதற்காக முதல் தவணையாக ரூ.1.74 கோடி வழங்கப்பட்டு பணிகள் நடந்தன.

இந்தநிலையில் காண்டிராக்டர் ஒருவர் கவர்னரை சந்தித்து அந்த தீவு ஆந்திர மாநிலத்துக்கு சொந்தமானது என்கிறார். இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் விசாரணையில் இருக்கும்போதே இதுதொடர்பாக விசாரணை வைப்போம் என்று கவர்னர் கூறுகிறார். நீதிமன்றத்தில் பிரச்சினை இருக்கும்போது அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. ஆவணங்களை பார்த்து நீதிமன்றம் முடிவு செய்யும்.

ஆனால் கவர்னர் கிரண்பெடி ஆந்திர காண்டிராக்டர் கொடுத்த மனுவை வைத்து விசாரணை என்கிறார். அந்த தீவினை ஆந்திராவுக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையை எடுக்கிறார். புதுவை மக்களுக்கு சாதகமாக அவர் செயல்படவில்லை. மு.க.ஸ்டாலின் சொன்னது முற்றிலும் உண்மை. தீவு ஆந்திராவுக்கு சொந்தமானது என்று கூறும் காண்டிராக்டரை கவர்னர் கிரண்பெடி அழைத்து பேசவேண்டிய காரணம் என்ன? இதில் இருந்தே அவரது உள்நோக்கம் தெரிகிறது.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

பேட்டியின்போது காங்கிரஸ் தலைவர் அமைச்சர் நமச்சிவாயம், வைத்திலிங்கம் எம்.பி., வடக்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் ஆகியோர் இருந்தனர்.

Next Story