சட்டசபை தேர்தலுக்கு பிறகு பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை திருப்பி வழங்க நடவடிக்கை; முதல்-மந்திரி பட்னாவிஸ் பேட்டி
மும்பையில் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் (பி.எம்.சி.) செயல்பாடுகள், ரூ.4,355 கோடி முறைகேடு காரணமாக முடக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த வங்கி வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மும்பை,
பி.எம்.சி. வங்கியை பொதுத்துறை வங்கியுடன் இணைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு அண்மையில் சிவசேனா கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில், மராட்டிய சட்டசபை தேர்தலுக்கான கடைசி நாள் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், பி.எம்.சி. வங்கி பிரச்சினை தொடர்பாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பி.எம்.சி. வங்கியில் ரூ.1 லட்சம் வரை டெபாசிட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது. அவர்களது பணத்துக்கு காப்பீடு செய்யப்பட்டு உள்ளது. அதிகளவில் பணம் டெபாசிட் செய்து உள்ள வீட்டுவசதி சங்கங்கள், மத நிறுவனங்களுக்கு தான் பிரச்சினை. அவர்களது பணத்தை திருப்பி வழங்க சட்டசபை தேர்தலுக்கு பிறகு மாநில அரசு நடவடிக்கை எடுக்கும். பி.எம்.சி. வங்கி, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும் அந்த வங்கியை பொதுத்துறை வங்கியுடன் இணைப்பது குறித்து மாநில அரசு ஆராயும். பி.எம்.சி. வங்கி பிரச்சினை குறித்து ஏற்கனவே பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் பேசி இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story