விருத்தாசலத்தில், புதுச்சேரி மதுபாட்டில்களில் போலி ஸ்டிக்கர் ஒட்டி கூடுதல் விலைக்கு விற்பனை
புதுச்சேரியில் இருந்து விருத்தாசலத்துக்கு மதுபாட்டில்களை கடத்தி வந்து, போலி ஸ்டிக்கரை ஒட்டி கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்தவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் விருத்தாசலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பூதாமூரில் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு கொட்டகையில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. போலீசார் வருவதை முன்கூட்டியே அறிந்ததால், அங்கிருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது.
இதையடுத்து போலீசார் அங்கிருந்த மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். அதில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்டு, இங்கு தமிழ்நாட்டுக்கான ‘ஸ்டிக்கர்களை’ ஒட்டி கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. அதாவது, ரூ.47 விலையுள்ள புதுச்சேரி மது பாட்டில்களை கடத்தி வந்து, அவற்றை தண்ணீரில் ஊற வைத்து பாட்டிலில் உள்ள ஸ்டிக்கரை அகற்றியுள்ளனர்.
பின்னர் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களில் ஒட்டப்பட்டு இருக்கும் ‘ஸ்டிக்கரை’ போன்று போலியான ‘ஸ்டிக்கரை’ தயார் செய்து அதில் ஒட்டி ரூ.105–க்கு விற்பனை செய்துள்ளனர். இதில் மொத்தம் புதுச்சேரியை சேர்ந்த 90 மதுபாட்டில்கள் மற்றும் போலி ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்டு இருந்த 60 மதுபாட்டில்கள் என்று மொத்தம் 150 பாட்டில்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு எடுத்து வந்தனர்.
இந்த செயலில் ஈடுபட்டவர்கள் யார்? யார்? என்பத குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அவர்களை பிடித்த பின்னரே போலி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மதுபாட்டில்கள் விருத்தாசலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளின் மூலம் விற்பனை செய்து மோசடி செய்து வந்தார்களா? அல்லது வேறு எந்த வழியில் விற்பனை செய்து வந்தனர் என்கிற முழு விவரம் தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story