தீபாவளி பண்டிகை முடியும் வரை ஆண்டிப்பட்டி நகருக்குள் வெளியூர் ஆட்டோக்கள் நுழைய கட்டுப்பாடு - போக்குவரத்து நெரிசலை தடுக்க போலீசார் நடவடிக்கை
தீபாவளி பண்டிகை முடியும் வரை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆட்டோக்கள் ஆண்டிப்பட்டி நகருக்குள் வருவதற்கு போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி நகரில் நூற்றுக்கணக்கான ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. இதுதவிர ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் தினந்தோறும் நூற்றுக்கணக்கான ஆட்டோக்கள் ஆண்டிப்பட்டி நகருக்குள் வந்து செல்கின்றன. ஆண்டிப்பட்டி நகரில் ஏற்கனவே சாலை குறுகலாக உள்ள நிலையில், அதிகமான ஆட்டோக்கள் இயக்கப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஆண்டிப்பட்டி நகருக்கு வரும் மக்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் ஆண்டிப்பட்டி பஜார்வீதி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
எனவே ஆண்டிப்பட்டி நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன்படி ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆண்டிப்பட்டி நகருக்குள் பயணிகளை ஏற்றிக்கொண்டு வரும் ஆட்டோக்கள் நுழைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து பகுதிகளில் இருந்து வரும் ஆட்டோக்களும் ஆண்டிப்பட்டி நகருக்கு முன்னரே தடுப்புகள் அமைக்கப்பட்டு திருப்பிவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டிப்பட்டியில் செயல்படும் ஆட்டோக்கள் மட்டுமே நகர்பகுதிக்குள் இயக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் ஆண்டிப்பட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் கூறும்போது, குறுகலான சாலை கொண்ட ஆண்டிப்பட்டி நகரில் தீபாவளி சமயத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு, போலீசார் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு ஆட்டோ டிரைவர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும். இந்த நிலை தீபாவளி பண்டிகை முடியும் வரை தொடரும் என்றார்.
Related Tags :
Next Story