நாடு முழுவதும் நாளை வேலைநிறுத்தம் வங்கி ஊழியர் சம்மேளன செயலாளர் தகவல்
பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் முடிவை கைவிடக்கோரி நாடு முழுவதும் நாளை நடைபெறும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் 5 லட்சம் பேர் பங்கேற்க இருப்பதாக வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் அருணாசலம் கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் அருணாசலம், ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் அருணாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:- தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை இணைக்க வேண்டும் என்ற முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதனால் மக்களுக்கான வங்கி சேவை பாதிக்கப்படும். மக்களின் பணத்துக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும். இது தனியார் மயமாக்கத்திற்கான ஓர் முயற்சியோ என்ற எண்ணமும் தோன்றுகிறது.
வங்கிகள் இணைப்பு, தனியார் மயமாக்கம் உள்ளிட்டவற்றை கைவிடக் கோரி நாடு முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதில் 5 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கின்றனர். இந்த வேலைநிறுத்தமானது வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கோ, இதர தேவைக்காகவோ நடத்தப்படவில்லை. மக்கள் சேமிப்புத் தொகை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நடைபெறுகிறது.
இதற்கு பிறகும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றால் தொடர் போராட்டங்கள், தெருமுனை பிரசாரங்கள் உள்ளிட்டவற்றை நடத்த இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பேசும்போது, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க சுதந்திர போர் தேவை என்ற நிலை தற்போது உருவாகி இருக்கிறது. இதற்கு மதசார்பற்ற கட்சிகளும், இடதுசாரி இயக்கங்களும், பொதுமக்களும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்றார்.
இதில் நாமக்கல் மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story