கள்ளக்காதலன் திருமணத்துக்கு முட்டுக்கட்டை: கழுத்தை நெரித்து பெண் படுகொலை - வாலிபர் கைது


கள்ளக்காதலன் திருமணத்துக்கு முட்டுக்கட்டை: கழுத்தை நெரித்து பெண் படுகொலை - வாலிபர் கைது
x
தினத்தந்தி 20 Oct 2019 10:00 PM GMT (Updated: 20 Oct 2019 8:38 PM GMT)

வேடசந்தூர் அருகே கள்ளக்காதலன் திருமணத்துக்கு முட்டுக்கட்டை போட்டதால் கழுத்தை நெரித்து பெண் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். ராணுவ வீரர் உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகே உள்ள கிழக்கு மாரம்பாடியை சேர்ந்தவர் திரவியம். மில்தொழிலாளி. அவருடைய மனைவி அருள்சத்தியாதேவி (வயது 30). நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற அருள்சத்தியாதேவி, பின்னர் வீடு திரும்பவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை வேடசந்தூர்-புதுரோடு சாலையில், நாகையகோட்டையில் உள்ள காட்டுப்பகுதியில் அருள்சத்தியாதேவி பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே மோட்டார் சைக்கிளும் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பின்னர் அருள் சத்தியாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த மோட்டார் சைக்கிளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த மோட்டார் சைக்கிள், கிழக்கு மாரம்பாடி அருகே உள்ள கோட்டைமந்தை கிராமத்தை சேர்ந்த அந்தோணிக்கு (வயது 19) சொந்தமானது என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

இறந்த அருள்சத்தியாதேவியின் கணவர் திரவியத்தின் அண்ணன் மகன் பீட்டர் (28). ராணுவ வீரரான இவர், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தபோது அருள்சத்தியாதேவியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. முறை தவறிய பழக்கம் என்ற போதிலும், இருவராலும் கள்ளக்காதலை கைவிட முடியவில்லை.

இதற்கிடையே பீட்டருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதற்கு அருள்சத்தியாதேவி எதிர்ப்பு தெரிவித்தார். எனவே திருமணத்துக்கு முட்டுக்கட்டையாக உள்ள, அருள்சத்தியாதேவியை தீர்த்து கட்ட பீட்டர் முடிவு செய்தார். இதற்காக அவர் தனது தம்பிகள் அந்தோணி, ஸ்டீபன் (18), நண்பர் சுந்தர் (19) ஆகியோரின் உதவியை நாடினார். அவர்களும் அருள்சத்தியாதேவியை தீர்த்துக்கட்ட உதவுவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வேடசந்தூர்-புதுரோடு சாலையில் நாகையகோட்டையில் உள்ள காட்டு பகுதிக்கு வருமாறு அருள்சத்தியாதேவியை, பீட்டர் அழைத்துள்ளார். அதன்படி அருள்சத்தியாதேவி அங்கு சென்றார். மேலும் பீட்டரும் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். பின்னர் 2 பேரும் அங்கு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அந்தவேளையில் அங்கு மறைந்திருந்த பீட்டரின் தம்பிகள் அந்தோணி, ஸ்டீபன், நண்பர் சுரே‌‌ஷ் ஆகியோர் வந்துள்ளனர். 3 பேர் திடீரென வந்ததை பார்த்து அருள்சத்தியாதேவி அதிர்ச்சி அடைந்தார். தன்னை கொல்ல வருவதை அறிந்த அருள்சத்தியாதேவி தப்பியோட முயன்றார்.

விரட்டி சென்று பிடித்த 4 பேரும் அருள்சத்தியாதேவியை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் அவர்கள் பயத்தில் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்றனர். மோட்டார் சைக்கிளை வைத்து அந்தோணியை பிடித்து விசாரணை நடத்தியபோது அருள்சத்தியாதேவி கொலை செய்தது தெரியவந்தது.

இவ்வாறு போலீசார் கூறினர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்தோணியை கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ராணுவ வீரர் பீட்டர், அவருடைய தம்பி ஸ்டீபன், நண்பர் சுந்தர் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story