நாங்குநேரியில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு


நாங்குநேரியில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 21 Oct 2019 4:15 AM IST (Updated: 21 Oct 2019 2:08 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரியில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

நெல்லை, 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டசபை தொகுதிக்கு இன்று (திங்கட்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதியில் அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் உள்பட 23 பேர் போட்டியிடுகிறார்கள். இங்கு மொத்தம் 299 வாக்குச்சாவடிகள் உள்ளன.

நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிவதற்கான எந்திரம் உள்ளிட்ட தேர்தல் உபகரணங்களை கொண்டு செல்ல 29 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ஒரு சிறப்பு மண்டல அலுவலரும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை ஏற்றி செல்லக்கூடிய வாகனங்கள் நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் நேற்று காலை 8 மணிக்கே தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. 11 மணிக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் இந்த வாகனங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மற்றும் ஓட்டுப்பதிவுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் போலீஸ் பாதுகாப்புடன் ஏற்றப்பட்டது. பின்னர் அந்த வாகனங்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வாகனங்களில் ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், 2 போலீசார், 2 ஊர்க்காவல் படைவீரர்கள், துப்பாக்கி ஏந்திய 2 சிறப்பு காவல் படை போலீசார் ஆகியோர் சென்றனர்.

இதற்கிடையே வாக்குச்சாவடிகளில் பணியாற்றக்கூடிய பணியாளர்களுக்கு நேற்று காலையில் நாங்குநேரி பிரான்சிஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் 3-ம் கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. தொடர்ந்து பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதையொட்டி அங்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. பணி நியமன ஆணை வாங்கிக்கொண்டு வாக்குச்சாவடிக்கு தேர்தல் பணியாற்ற ஆசிரியர்கள் புறப்பட்டு சென்றனர். மேலும் காலதாமதம் ஆன இடங்களில் மண்டல அலுவலர்கள் சென்று காத்து இருந்து ஓட்டுப்பதிவு எந்திரங்களை தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களிடம் வழங்கினர். வாக்குச்சாவடி அலுவலர்கள் முன்னிலையில் தலையாரி மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் வாக்குச்சாவடிக்கு தேவையான ஏற்பாடுகளை செய்தனர். வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர், 200 மீட்டர் தூரத்திற்கு கோடுகள் போடப்பட்டு இருந்தது.

Next Story