தீபாவளி பண்டிகையையொட்டி, கரூர் கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதல் - போலீசார் துண்டு பிரசுரம் வினியோகம்
தீபாவளி பண்டிகையையொட்டி கரூர் கடையில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் போலீசார் துண்டு பிரசுரம் வினியோகம் செய்து அறிவுரை வழங்கினார்.
கரூர்,
தீபாவளி பண்டிகை வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி புது துணி எடுப்பது மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக கரூர் ஜவகர்பஜார் கடைவீதியில் மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியபடி இருந்தது. இதையொட்டி கரூர் தாலுகா அலுவலகம் அருகேயுள்ள புறக்காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி, ஏட்டுகள் கோபிநாத், ஜெயராஜ் ஆகியோர், திருடர்களிடமிருந்து பொதுமக்களை காக்கும் பொருட்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்து அறிவுரை வழங்கினார்கள். அப்போது, பொருட்கள் வாங்க வருகிற சமயத்தில் காரினை கரூர் கடைவீதி மற்றும் பொது இடங்களில் நிறுத்துகிற போது விலைஉயர்ந்த பொருட்கள் நகை, பணம், செல்போன் ஆகியவற்றை வைத்து விட்டு செல்லாதீர்கள். ஏனெனில் கார் கண்ணாடியை உடைத்து திருடர்கள் அந்த பொருளை திருட வாய்ப்புள்ளது.
எனவே நகை, பணம் உள்ளிட்டவற்றை கையிலேயே எடுத்து செல்ல வேண்டும். பணம் கீழே கிடப்பதாகவும், உங்கள் ஆடையில் கரை இருப்பதாகவும் கூறி கவனத்தை திசை திருப்பி சிலர் நகை-பணம் திருட முயற்சிப்பதுண்டு. எனவே சுதாரிப்புடன் இருப்பது அவசியம் ஆகும். வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கிற போது வெளிநபர்களிடம் ரகசிய குறியீடு எண்ணை கூறி ஏ.டி.எம். கார்டினை கொடுக்காதீர்கள். சந்தேக நபர்கள் குறித்த தகவலை புறக்காவல் நிலையத்தில் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் பொதுமக்களிடம் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story