ஸ்ரீபெரும்புதூரில் வீரமரணமடைந்த போலீசாருக்கு மரியாதை


ஸ்ரீபெரும்புதூரில் வீரமரணமடைந்த போலீசாருக்கு மரியாதை
x
தினத்தந்தி 21 Oct 2019 9:45 PM GMT (Updated: 21 Oct 2019 8:16 PM GMT)

கடந்த 1991-ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் அன்றைய பாரத பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் பலியானார்.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991-ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் அன்றைய பாரத பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் பலியானார். இந்த தாக்குதலின் போது பாதுகாப்பில் இருந்த போலீஸ்காரர்கள் பலர் உயிரிழந்தனர். அவர்களின் நினைவாக ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டது.

அந்த வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி உயிரிழந்த போலீசாரின் நினைவு நாள் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, நேற்று ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள நினைவிடத்தில் ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், மத்திய காவல்படை துணை சூப்பிரண்டு முருகராஜ் மற்றும் ஒரகடம் இன்ஸ்பெக்டர் நடராஜன் உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

மேலும் அதே போல், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் தலைமையில் மாணவர்கள் பங்கேற்ற மினி மாரத்தான் ஓட்ட பந்தயம் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்ட பந்தய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் பரிசுகளை வழங்கினார். இதில், சப்-இன்ஸ்பெக்டர் வில்வமணி, சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story