புதுவை காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் 69 சதவீதம் வாக்குப்பதிவு - அமைதியாக நடந்து முடிந்தது


புதுவை காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் 69 சதவீதம் வாக்குப்பதிவு - அமைதியாக நடந்து முடிந்தது
x
தினத்தந்தி 21 Oct 2019 11:30 PM GMT (Updated: 21 Oct 2019 8:33 PM GMT)

புதுவை காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. மொத்தம் 69.44 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

புதுச்சேரி, 

புதுவை காமராஜ் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 21-ந்தேதி அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து உடனடியாக தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. பின்னர் வேட்புமனு தாக்கல் முடிந்து இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 9 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் ஜான்குமார் (காங்கிரஸ்), புவனேஸ்வரன் (என்.ஆர்.காங்கிரஸ்), வெற்றிச்செல்வம் (மக்கள் முன்னேற்ற காங்கிரஸ்), பிரவீனா (நாம் தமிழர் கட்சி) ஆகியோரிடையே தான் போட்டி நிலவியது.

முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் மற்றும் அமைச்சர்கள், தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் தினமும் தொகுதியில் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் புதுச்சேரி வந்து காங்கிரசுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனுக்கு ஆதரவாக அந்த கட்சியின் தலைவர் ரங்கசாமி, கூட்டணி கட்சிகளான அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் உள்பட பலர் வீடு வீடாக சென்று வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினர்.

மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் தலைவர் கண்ணன், தனது கட்சி வேட்பாளரான வெற்றிச்செல்வத்துக்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரவீனாவும் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு கேட்டார். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் புதுச்சேரி வந்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

கடந்த 3 வாரங்களாக தலைவர்களின் முற்றுகையால் காமராஜ் நகர் தொகுதி களைகட்டியது. கடந்த 19-ந்தேதி மாலையுடன் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.

இதற்கிடையே அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் வேட்பாளர்கள் பெயர், தேர்தல் சின்னங்கள் பொருத்தப்பட்டு வாக்கு எந்திரங்கள் லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் நேற்று முன்தினம் மதியம் காமராஜ் நகர் தொகுதியில் உள்ள 32 வாக்குச்சாவடிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன.

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் வசதிக்காக நிழற்பந்தல், குடிநீர் வசதி, மாற்று திறனாளிகள் ஏறி வருவதற்கு வசதியாக சாய்வுதளம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ரெயின்போ நகரில் உள்ள சிறப்பு பள்ளியில் முழுக்க முழுக்க பெண்களே பணிபுரியும் வாக்குச்சாவடியும் அமைக்கப்பட்டிருந்தது. அமைதியான முறையில் வாக்குப்பதிவினை நடத்த 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. மதுக்கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக இந்த தொகுதியை சேர்ந்தவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை விடப்பட்டிருந்தது.

பூத் சிலிப் மட்டுமின்றி பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் உள்ளிட்ட தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 11 ஆவணங்களை காண்பித்து வாக்குப்பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொகுதியில் 7 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டிருந்தது. அங்கு துணை ராணுவப்படையினருடன் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள், காவலர்கள் என 1,500க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர்.

நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய விட்டு விட்டு மழை பெய்தபடி இருந்தது. நேற்று அதிகாலையிலும் மழை பெய்ததால் குறைந்த எண்ணிக்கையிலேயே வாக்காளர்கள் வந்து இருந்ததால் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது.

சாமிப்பிள்ளைதோட்டம், கருவடிக்குப்பம் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் வருகை அதிகமாக இருந்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று அவர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். அதேநேரத்தில் ரெயின்போ நகர், வெங்கட்டாநகர், கிருஷ்ணா நகர் பகுதி வாக்குச்சாவடிகளில் குறைந்த அளவிலேயே வாக்காளர்கள் வந்திருந்தனர்.

வாக்குப்பதிவு நிலவரம் காலை 9 மணிக்கு மேல் மாறியது. அதன்பின் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

காலை 9 மணி நிலவரப்படி 9.66 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன. 10 மணிக்கு 11.60 சதவீத வாக்குகள் பதிவானது. அதாவது 4 ஆயிரத்து 60 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர். 11 மணிக்கு இந்த வாக்குப்பதிவின் அளவு 28.17 சதவீதமாக அதிகரித்தது. அதாவது 9 ஆயிரத்து 862 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.

பிற்பகல் 1 மணிக்கு வாக்குப்பதிவின் சதவீதம் 42.71 சதவீதமாக அதிகரித்தது. மொத்தமுள்ள வாக்காளர்களில் 14 ஆயிரத்து 952 பேர் தங்களது வாக்குகளை பதிவிட்டிருந்தனர். பிற்பகல் 3 மணிக்கு வாக்குப்பதிவு சதவீதம் 56.16 சதவீதமாக உயர்ந்தது. 19 ஆயிரத்து 661 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

மாலை 5 மணி அளவில் 66.95 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. அதாவது 11 ஆயிரத்து 242 ஆண்கள், 12 ஆயிரத்து 194 பெண்கள் 3-ம் பாலினத்தவர் ஒருவர் என ஒட்டுமொத்தமாக 23 ஆயிரத்து 437 பேர் வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.

மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அப்போது 69.44 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன. அதாவது 24 ஆயிரத்து 310பேர் வாக்களித்து இருந்தனர். அதாவது ஆண் வாக்காளர்கள் 11 ஆயிரத்து 695 பேரும், பெண் வாக்காளர்கள் 12 ஆயிரத்து 614 பேரும், 3-ம் பாலின வாக்காளர் ஒருவரும் வாக்களித்து இருந்தனர்.

வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன. அங்குள்ள ஸ்டிராங்க் ரூமில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது. வருகிற 24-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. அதுவரை அங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Next Story