உரத்துக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்; குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


உரத்துக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்; குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 23 Oct 2019 4:45 AM IST (Updated: 22 Oct 2019 10:10 PM IST)
t-max-icont-min-icon

உரத்துக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஈரோடு,

விவசாயிகளின் குறைகளை கேட்கும் வகையில் கோட்ட அளவிலான கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆர்.டி.ஓ. முருகேசன் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவித்து பேசினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-

கீழ்பவானி பாசன கொப்பு வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் உள்ள சந்தைகளில் வரைமுறை இல்லாமல் சுங்கம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும்.

காலிங்கராயன் வாய்க்காலில் இருபுறமும் உள்ள கரைகளில் வாகனங்கள் சென்றுவரும் வகையில் சாலை அமைக்க வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்துள்ள 2017-2018 ஆம் ஆண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மஞ்சள் விவசாயிகளுக்கு காப்பீடு நிவாரணத்தொகையை வழங்க வேண்டும்.

உரம், பூச்சி மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை செலவாகிறது. மகசூல் அடிப்படையில் கிலோவுக்கு ரூ.24 வரை செலவாகிறது. ஆனால் அரசு நெல் கொள்முதல் விலையை ரூ.19 ஆக நிர்ணயித்துள்ளது. இதனால் நெல் கொள்முதல் விலையை கிலோவுக்கு ரூ.25 ஆக நிர்ணயிக்க வேண்டும்.

பவானிசாகர் அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்படும்போதெல்லாம் கீழ்பவானி வாய்க்கால் தண்ணீரை பூந்துறை, வெள்ளோடு குளங்களுக்கு திருப்பி விட வேண்டும். கிராம ஊராட்சி பகுதிகளில் குடிநீர் தொட்டிகளை மாதம் ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள்.

அதற்கு பதில் அளித்து ஆர்.டி.ஓ. முருகேசன் கூறியதாவது:-

கொப்பு வாய்க்காலில் தண்ணீர் சீராக செல்லும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும். காலிங்கராயன் வாய்க்கால் கரையில் பனை விதைகளை நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சந்தைகளிலும், சுங்க கட்டணம் குறித்த அறிவிப்பு பலகையை வைக்கப்படும். அளவுக்கு அதிகமாக சுங்கம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்

Next Story