பெரம்பலூரில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
பெரம்பலூரில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவர் எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்,
சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் முரளிதரன்(வயது 27). பிளஸ்-2 வரை படித்துள்ள முரளிதரன், பெரம்பலூர் வெங்கடேசபுரம் சுந்தர் நகர் 3-வது குறுக்குத்தெருவில் ஒரு வாடகை வீட்டின் அறையில் தங்கி நாரணமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் டயர் தொழிற்சாலையில் கடந்த 9 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். அதே அறையில் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பெரிச்சா கவுண்டம்பாளையத்தை சேர்ந்த செல்வகுமார்(29) என்பவரும் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செல்வகுமார் வேலைக்கு சென்றுவிட்டார். ஆனால் முரளிதரன் பணிக்கு செல்லாமல் அறையை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு மின்விசிறி அருகே இருந்த கொக்கியில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முரளிதரன் நேற்று காலை நீண்டநேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் முரளிதரன் தங்கியிருந்த அறையின் ஜன்னல் வழியே பார்த்தபோது முரளிதரன் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து அவர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், போலீசார் அங்கு விரைந்து சென்று கதவின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கி கொண்டிருந்த முரளிதரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அவர் தங்கியிருந்த அறையை போலீசார் ஆய்வு செய்ததில், முரளிதரன் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில் அவர் எழுதியிருந்ததாவது:-
தனது சாவிற்கு யாரும் காரணமில்லை. சரியாக படிக்காததாலும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும், எதிர்காலத்தை எப்படி சமாளிப்பது என்பதை நினைத்து வருத்தப்பட்டு இந்த முடிவை எடுக்கிறேன் என்று உருக்கமாக கூறியிருந்தார். இதையடுத்து அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story