வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் - ரூ.100 கோடி பரிவர்த்தனை பாதிப்பு


வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் - ரூ.100 கோடி பரிவர்த்தனை பாதிப்பு
x
தினத்தந்தி 23 Oct 2019 4:15 AM IST (Updated: 22 Oct 2019 11:26 PM IST)
t-max-icont-min-icon

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.100 கோடிக்கு மேல் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

திருச்சி, 

அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் மற்றும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் மத்திய அரசின் வங்கிகள் இணைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நாடு முழுவதும் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. 4 லட்சத்திற்கும் அதிகமான வங்கி ஊழியர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

அதன்படி, திருச்சி மாவட்டத்திலும் நேற்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு உடனடியாக வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும். வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். வாடிக்கையாளர்கள் மீது அதிகமான சேவை கட்டணத்தை திணிக்கக்கூடாது. குறைந்த வட்டியில் விவசாய கடன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

திருச்சி மாநகரில் 150-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள், புறநகர் மாவட்டத்தில் 106 வங்கிகளின் ஊழியர்கள் என 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். வேலைநிறுத்த போராட்டம் காரணமாக வங்கிகள், ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. சில வங்கிகளில் அதிகாரிகள் மட்டும் அமர்ந்திருந்தனர். இருப்பினும் முக்கிய பணிகளான காசோலை பரிமாற்றம், வங்கி பண பரிவர்த்தனை ஆகியவை பாதிக்கப்பட்டன. மேலும் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் பணியும் நேற்று நடைபெற வில்லை.

திருச்சி மாநகரில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் நேற்று திருச்சி-கரூர் பைபாஸ் சாலையில் உள்ள விஜயா வங்கி முன்பு திரண்டனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இது குறித்து வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘பொதுத்துறை வங்கிகள் இணைப்பினால் நாடெங்கும் பல வங்கிக் கிளைகள் மூடப்படும் அபாயம் உள்ளது. வங்கி ஊழியர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுவதுடன் கட்டாய ஓய்வு வழங்கும் நிலை உருவாகும். மேலும் வங்கித்துறையில் வேலைவாய்ப்பு என்பது எதிர்காலத்தில் இல்லாமல் போய்விடும். தற்போது வங்கிகள் பொதுமக்களிடம் சேவை கட்டணம் என்ற பெயரில் பல்வேறு சேவைகளுக்காக வசூலிப்பதை நிறுத்த வேண்டும். நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத்துறைக்கு அதிகமான கடன்களை வழங்குவதோடு மட்டுமல்லாது, அத்தகைய கடன்களை குறைந்த வட்டியில் வழங்கிட வேண்டும். வங்கிகளில் பெரும் முதலாளிகள் கடன் பெற்றுவிட்டு திரும்ப செலுத்தாத போக்கு அதிகரித்துள்ளதால் நாட்டில் வங்கிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விட்டது. கடனை திரும்ப செலுத்த மறுப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ஒரே நாளில் ரூ.100 கோடிக்கு மேல் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் விரோத வங்கிகள் சீர்திருத்தத்தை கைவிட்டு, மக்கள் பணத்துக்கு தக்க பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும்’ என்றனர்.

Next Story