ஸ்ரீரங்கம் கோட்டப்பகுதியில் 2,331 வீடுகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி


ஸ்ரீரங்கம் கோட்டப்பகுதியில் 2,331 வீடுகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி
x
தினத்தந்தி 23 Oct 2019 3:15 AM IST (Updated: 22 Oct 2019 11:26 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கம் கோட்டப்பகுதியில் உள்ள 2,331 வீடுகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது.

திருச்சி, 

திருச்சி மாநகராட்சி 65-வது வார்டு பகுதியில் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களை கட்டுப்படுத்துவது குறித்து சுகாதாரக் கல்வி அளிக்கவும் மற்றும் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு பணிக்காகவும் 18 குழுவாக 20 நபர்கள் என மொத்தம் 360 தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் இணைந்து மாநகராட்சி சுகாதார பணியாளர்கள், டாக்டர்கள் கண்காணிப்பில் கொசுப்புழு ஒழிக்கும் பணி, கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணி ஆகியவை நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று ஸ்ரீரங்கம் கோட்டம் 5-வது வார்டு பு‌‌ஷ்பாக்நகர் பகுதியில் குடியிருப்பு நலச் சங்கங்களை ஒருங்கிணைத்து கொசு ஒழிப்பு பணியை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அவர், வீடுகளில் ஆய்வு செய்தார்.

அப்பகுதியில் உள்ள 13 தெருக்களில், 120 நகர்ப்புற செவிலியர்கள், 40 தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளர்கள், 32 கொசு ஒழிப்பு புகைமருந்து அடிக்கும் நபர்கள், 30 துப்புரவு பணியாளர் மற்றும் 5 மேற்பார்வையாளர்கள், 2 சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழு 2,331 வீடுகளில் கொசுப்புழு ஒழிக்கும் பணி, கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டார்கள். இதில் பொதுமக்கள் தங்கள் வீடுதோறும் வரும் தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளர்களின் பணியை முழுமையாக செய்திட மிகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வணிக வளாகங்கள், கொசுப்புழு உருவாக ஏதுவான பொருட்களான உபயோகமற்ற டயர்கள், பிளாஸ்டிக் கப்புகள், தேங்காய் சிரட்டைகள், இளநீர் கூடுகள், உடைந்த பூஞ்சாடிகள், உடைந்த மண்பாண்டங்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அவற்றை மாநகராட்சி துப்புரவு பணியாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

அதேபோல் தங்கள் வீடுகளில் உள்ள மேல்நிலை மற்றும் கீழ்நிலை தொட்டிகளை வாரம் ஒருமுறையாவது பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள குளிர்சாதனப் பெட்டிக்கு பின்புறம் உள்ள தண்ணீர் சேகரமாகும் இடத்தை வாரம் ஒருமுறை என வியாழக்கிழமை தோறும் சுத்தம் செய்ய வேண்டும். தற்போது வாரந்தோறும் வியாழக்கிழமை டெங்கு ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

மேற்கூறிய வழிகாட்டுதல்களை பின்பற்றி திருச்சி மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சலை வராமல் தடுத்திட பொதுமக்கள் மிகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஆணையர் ரவிச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது நகர்நல அலுவலர் டாக்டர் ஜெகநாதன், உதவி ஆணையர் வைத்தியநாதன், உதவி செயற்பொறியாளர் ராஜே‌‌ஷ்கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story