மார்த்தாண்டம் அருகே, பெட்டிக்கடையில் ரூ.1 லட்சம் திருட்டு


மார்த்தாண்டம் அருகே, பெட்டிக்கடையில் ரூ.1 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 23 Oct 2019 3:30 AM IST (Updated: 23 Oct 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே பெட்டிக்கடையில் ரூ.1 லட்சம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

குழித்துறை, 

மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை கையாலவிளையை சேர்ந்தவர் பாலையன் (வயது 62). இவருக்கு உண்ணாமலைக்கடை சந்திப்பு பகுதியில் சொந்தமாக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சொந்த தேவைக்காக பாலையன் அருகில் உள்ள வங்கியில் நகையை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்தை வாங்கி ஒரு பையில் போட்டு கடையில் வைத்திருந்தார். இரவு வியாபாரத்தை முடித்த பின் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

நேற்று காலையில் கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் மாயமாகி இருந்தது. நள்ளிரவில் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுபற்றி மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, பாலையன் கடையின் அருகில் உள்ள நிதி நிறுவனத்திலும் மர்ம நபர்கள் திருட முயன்றது தெரிந்தது. அதைத்தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதிகாலையில் 2 மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவது பதிவாகி இருந்தது.

மேலும், பெட்டிக்கடையில் திருடிய மர்ம நபர்கள் அதே பகுதியை சேர்ந்த ராஜன் என்பவர் வீட்டு முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை திருடி உள்ளனர். பின்னர் அதை இயக்க முடியாததால் அருகில் உள்ள ஆலுமூட்டு குளத்தின் கரையில் போட்டு விட்டு சென்றுள்ளனர். ஆனால் அதே பகுதியில் உள்ள ஜெயின் என்பவரது மோட்டார் சைக்கிளை திருடி சென்றுள்ளனர்.

இந்த சம்பவங்கள் குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story