கோவில்பட்டியில் கட்டுமான பணியின்போது கொத்தனார் சாவு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


கோவில்பட்டியில் கட்டுமான பணியின்போது கொத்தனார் சாவு: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 22 Oct 2019 10:30 PM GMT (Updated: 22 Oct 2019 7:40 PM GMT)

கோவில்பட்டியில் கட்டுமான பணியின்போது இறந்த கொத்தனாரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் கட்டுமான பணியின்போது இறந்த கொத்தனாரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொத்தனார் சாவு

கோவில்பட்டி நடராஜபுரம் 9-வது தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). கொத்தனாரான இவர் நேற்று முன்தினம் கோவில்பட்டி புது ரோடு பகுதியில் புதிய கட்டிடத்தில் டைல்ஸ் கற்கள் பதிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது அவர், கல் அறுக்கும் எந்திரம் மூலம் டைல்ஸ் கல்லை அறுத்தபோது, எந்திரத்தின் பிளேடு துண்டாகி அவரது கழுத்தில் பாய்ந்ததில் உயிரிழந்தார்.

இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ஆறுமுகத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உறவினர்கள் போராட்டம்

இந்த நிலையில், கட்டுமான பணியின்போது இறந்த ஆறுமுகத்தின் குடும்பத்தினருக்கு கட்டிட உரிமையாளர் மற்றும் கட்டுமான தொழிலாளர் நலவாரியம் சார்பில், இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் நேற்று காலையில் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பா.ஜ.க. நகர பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், துணை தலைவர் நல்லதம்பி, வக்கீல் பிரிவு செயலாளர் நீதிபாண்டி, ஆர்.எஸ்.எஸ். நகர செயலாளர் ஆனந்தன், இந்து முன்னணி நகர பொதுச்செயலாளர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன், சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கட்டிட உரிமையாளர் சார்பில் ஈமச்சடங்கு நிதியாக ரூ.10 ஆயிரமும், ஆறுமுகத்தின் 2 பிள்ளைகளின் பெயரில் தலா ரூ.1 லட்சமும் உடனே வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் 2 மாதங்களில் 2 பிள்ளைகளின் பெயரில் மேலும் தலா ரூ.75 ஆயிரம் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மூலமும் இழப்பீட்டு தொகை வழங்க ஏற்பாடு செய்வதாக போலீசார் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஆறுமுகத்தின் உடலை உறவினர்கள் பெற்று சென்று, இறுதிச்சடங்கு நடத்தினர்.

Next Story