தரடாப்பட்டு ரேஷன் கடையில் மண்எண்ணெய் வாங்க தள்ளு முள்ளு - கடையை 2 ஆக பிரிக்க பொதுமக்கள் கோரிக்கை
தரடாப்பட்டு ரேஷன் கடையில் மண்எண்ணெய் வாங்க தள்ளு முள்ளு ஏற்பட்டது. எனவே, கடையை 2 ஆக பிரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தண்டராம்பட்டு,
தண்டராம்பட்டு தாலுகா தரடாப்பட்டுவில் உள்ள ரேஷன் கடையில் 1,556 கார்டுகள் உள்ளன. தரடாப்பட்டு, அண்ணாநகர், பெரியார் நகர், அம்பேத்கர் நகர், வெள்ளம் பாறை, இருளர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வாழும் பொதுமக்கள் இந்த ஒரே ரேஷன் கடைக்கு தான் வந்து பொருட்கள் வாங்க வேண்டும். ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவு பொருட்களை வாங்க வேண்டிய நிலை உள்ளது.
இந்த கடைக்கு உணவு பொருட்கள் குறைந்த அளவே வினியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் 20-ந் தேதிக்குள் அரிசி உள்பட அனைத்து பொருட்களும் காலியாகி விடுகிறது என்று கடை விற்பனையாளர் கூறுகிறார். பொருட்கள் சரிவர கிடைக்காததால் கடையில் உணவு பொருட்களை வாங்க பொதுமக்கள் போட்டி போட்டு ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்லும் போது தகராறில் ஈடுபடும் சூழ்நிலை நிலவுகிறது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. பருப்பு, மண்எண்ணெய் போன்ற பொருட்கள் ஒரு நாள் மட்டுமே தரப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மண்எண்ணெய் வாங்குவதற்காக கடை முன்பு கூட்டம் அலைமோதியது. இதனால் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு மண்எண்ணெய் வாங்க சென்றனர். அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த சிரமங்களை தவிர்க்க கடையை 2 ஆக பிரிக்க வேண்டும் என்று கடந்த 5 ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இதே கோரிக்கையை முன்வைத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கடை 2 ஆக பிரிக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கடையை 2 ஆக பிரிக்க வேண்டும் என்றும், போதிய உணவு பொருட்கள் வினியோகிக்கப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story