வங்கிக்கடன் வாங்கி தருவதாக கூறி மகளிர் சுயஉதவி குழுவினரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி


வங்கிக்கடன் வாங்கி தருவதாக கூறி மகளிர் சுயஉதவி குழுவினரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி
x
தினத்தந்தி 23 Oct 2019 10:30 PM GMT (Updated: 23 Oct 2019 5:53 PM GMT)

வங்கிக்கடன் வாங்கி தருவதாக கூறி மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி,

தேனி மாவட்ட குற்றப்பிரிவில் வயல்பட்டி, கொடுவிலார்பட்டியை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுவினர் புகார் மனுக்கள் அளித்துள்ளனர். அந்த புகாரில், ‘பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு வங்கிக் கடன் பெற்றுக் கொடுக்கும் ஒரு நிறுவனம் செயல்படுவதாக தகவல் கிடைத்தது. அந்த நிறுவனத்தில் வங்கிக் கடன் பெறுவதற்கு காப்பீடு தொகை செலுத்த வேண்டும் என்று கூறினர். அதன்பேரில் மகளிர் குழுவினர் சார்பில் பணம் செலுத்தினோம். பணத்தை பெற்றுக் கொண்ட பின்பு, அந்த நிறுவனத்தை மூடிவிட்டு சென்று விட்டனர். எனவே அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இந்த மனு குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பாண்டிச்செல்வம் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில், இந்த நிறுவனத்தின் சார்பில், ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, கம்பம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மகளிர் குழுவினரிடமும் வங்கிக் கடன் பெற்றுக் கொடுப்பதாக கூறி பணம் பெற்று பல லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘சில நாட்களே இந்த நிறுவனம் செயல்பட்டுள்ளது. நிறுவனத்தை நடத்திய நபர்கள் 3 பேர் ஆவர். அவர்கள் பெரியகுளத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியபடி, நிறுவனத்தின் அலுவலகத்துக்கு வந்து சென்றுள்ளனர். மகளிர் குழுவினரை தொடர்பு கொள்வதற்கு ஆட்களை நியமித்து வங்கிக் கடன் பெற்றுக் கொடுப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். அதை நம்பிய மக்கள் காப்பீடு தொகை என்றும், முன்பணம் என்றும் பல்வேறு வடிவங்களில் பணம் செலுத்தி உள்ளனர். வயல்பட்டி, கொடுவிலார்பட்டி ஆகிய 2 ஊர்களில் மட்டும் ரூ.7 லட்சம் வரை வசூலித்து மோசடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த நிறுவனத்தை நடத்திய நபர்கள் தலைமறைமாகி விட்டனர். அவர்களை தேடி வருகின்றனர். இந்த பிரச்சினை தொடர்பாக தென்கரை போலீஸ் நிலையத்திலும் ஒரு தரப்பு மக்கள் புகார் கொடுத்து விசாரணை நடந்து வருகிறது’ என்றார்.

‘சதுரங்க வேட்டை’ என்ற சினிமாவில் இதுபோன்ற பல்வேறு நூதன மோசடி குறித்த காட்சிகள் இடம் பெற்று இருக்கும். அதே சினிமா பாணியில் சில நாட்களே செயல்பட்ட நிறுவனத்தில் பணத்தை கொடுத்து ஏராளமான மக்கள் ஏமாந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story