இந்த ஆண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது


இந்த ஆண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது
x
தினத்தந்தி 23 Oct 2019 11:00 PM GMT (Updated: 23 Oct 2019 6:18 PM GMT)

இந்த ஆண்டில் 3-வது முறையாக மேட்டூர் அணை நேற்று நிரம்பியது.

மேட்டூர்,

தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு கை கொடுக்கவில்லை. இருப்பினும் கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் இந்த தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதனால் கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் உள்பட முக்கிய அணைகள் நிரம்பின.

அந்த அணைகள் நிரம்பிய நிலையில், தொடர்ந்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் அந்த அணைகளில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

முதல் முறை நிரம்பியது

இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லை பகுதியில் உள்ள பிலிகுண்டுலுவை கடந்து தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த ஜூலை மாதம் முதல் படிப்படியாக அதிகரித்து கொண்டே வந்தது.

இதன் காரணமாக மேட்டூர் அணை இந்த ஆண்டில் முதல்முறையாக கடந்த மாதம் 7-ந் தேதி நிரம்பியது. பின்னர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு காரணமாக நீர்மட்டம் மீண்டும் இறங்கி வந்த நிலையில், அணைக்கு நீர்வரத்து திடீரென மீண்டும் அதிகரித்தது.

2-வது முறையாக..

இதனால் கடந்த மாதம் 24-ந் தேதி மேட்டூர் அணை மீண்டும் தனது முழு கொள்ளளவை எட்டியது. இதன்மூலம் இந்த ஆண்டில் இரு முறை அணை நிரம்பியது.

இதைத்தொடர்ந்து அணையில் இருந்து காவிரி டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குறைய தொடங்கியது. கடந்த 17-ந் தேதி 113.03 அடியாக குறைந்தது.

இந்த சூழலில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோன்று கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால், அவ்வப்போது கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்படுகிறது. இதன்விளைவாக அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கியது.

3-வது முறையாக நிரம்பியது

அதே நேரத்தில் தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழையின் அளவு அதிகரித்ததால் பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை மிகவும் குறைந்தது. இதன்காரணமாக அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 500 கனஅடியாகவும், கால்வாய் பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 350 கனஅடியாகவும் குறைக்கப்பட்டது.

அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை விட, அணைக்கு வரும் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரத்தொடங்கியது. நேற்று முன்தினம் அணை நீர்மட்டம் 119 அடியை எட்டியது.

இதையடுத்து நீர்வரத்து தொடர்ந்து சீராக இருந்ததால் நேற்று காலை 6.15 மணியளவில் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி மேட்டூர் அணை நிரம்பியது. அதாவது அணையில் 93.45 டி.எம்.சி. தண்ணீர் நிரம்பியது. (ஒரு டி.எம்.சி. என்பது நூறு கோடி கனஅடி). இதன்மூலம் இந்த ஆண்டில் 3-வது முறையாக அணை நிரம்பியது.

தண்ணீர் திறப்பு

காலை 8 மணிக்கு மேல் அணைக்கு நீர்வரத்தானது, வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரித்தது. இதனால் காலை 10 மணி முதல் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கனஅடி வீதமும், அணையையொட்டி அமைந்துள்ள நீர்மின்நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேட்டூர் கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 350 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

அணை நிரம்பியதையொட்டி பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிறப்பு பூஜை செய்து காவிரி அன்னையை மலர்தூவி வழிபட்டனர். இதில், பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் தேவராஜன், உதவி நிர்வாக பொறியாளர் கோபி, அணை பிரிவு உதவி பொறியாளர் மதுசூதனன் மற்றும் பொதுப்பணித்துறையினர் கலந்து கொண்டனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை

அணையில் இருந்து காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால், காவிரி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேட்டூர் அருகே தங்கமாபுரிபட்டணம் புதுப்பாலம் அருகே காவிரி கரையோரத்தில் வருவாய்த்துறையினர் தண்டோரா அறிவிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது காவிரி ஆற்றில் கூடுதல் நீர்வருவதால் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம், ஆபத்தான முறையில் செல்பி எடுக்க கூடாது என்று எச்சரிக்கை செய்தனர்.

மேலும் காவிரி பாய்ந்தோடும், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் காவிரி காரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story