திருச்செந்தூர் ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை; ரூ.1 லட்சம் சிக்கியது ஆணையாளர் வீட்டிலும் விசாரணை
திருச்செந்தூர் ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தியதில் கணக்கில் காட்டப்படாத ரூ.1¼ லட்சம் சிக்கியது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தியதில் கணக்கில் காட்டப்படாத ரூ.1¼ லட்சம் சிக்கியது. ஆணையாளரை, அவரது வீட்டிற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களிடம் மாமுல் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று மாலை 6.15 மணி அளவில் திருச்செந்தூர் ஒன்றிய அலுவலகத்தில் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹெக்டர் தர்மராஜ் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன், கலெக்டர் அலுவலக தணிக்கை குழு அதிகாரி நாகசுப்பிரமணியம் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
தீவிர விசாரணை
அப்போது அலுவலகத்தில் இருந்து வெளியே யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. வெளியில் இருந்தும் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஒன்றிய அலுவலகத்தில் உள்ள அனைவரிடமும் இருந்த செல்போன்களை போலீசார் வாங்கி கொண்டனர்.
அலுவலகத்தில் இருந்த ஆணையாளர் சுடலை மற்றும் ஊழியர்கள், ஒப்பந்ததாரர்களிடம் அதிகாரிகள் துருவி, துருவி தீவிர விசாரணை நடத்தினர். அங்குள்ள அனைத்து அறைகளுக்கும் சென்று, மேஜைகள், பீரோக்களை திறந்து போலீசார் சோதனை நடத்தினார்கள்.
ரூ.1¼ லட்சம் சிக்கியது
அப்போது அங்கு கணக்கில் காட்டப்படாமல் வைக்கப்பட்டு இருந்த ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் ஒன்றிய ஆணையாளர் சுடலையை திருச்செந்தூரில் உள்ள அவரது வீட்டுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் அழைத்து சென்று, அங்கும் சோதனை நடத்தினர். பின்னர் அவரை மீண்டும் ஒன்றிய அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.
நள்ளிரவு வரையிலும் இந்த சோதனை நீடித்ததால், ஒன்றிய அலுவலகத்தில் இருந்த அனைவருக்கும் போலீசார் ஓட்டலில் இருந்து உணவு வாங்கி வந்து வழங்கினர். திருச்செந்தூர் ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி ரூ.1¼ லட்சம் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story