தனியார் மயமாக்குவதை கண்டித்து மத்திய அரசின் உத்தரவு நகலை எரித்து ரெயில்வே ஊழியர்கள் போராட்டம்
தனியார் மயமாக்குவதை கண்டித்து மத்திய அரசின் உத்தரவு நகலை எரித்து விருத்தாசலத்தில் ரெயில்வே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
ரெயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், ஊழியர்களுக்கு வயது மற்றும் பதவி காலம் அடிப்படையில் கட்டாய ஓய்வு கொடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், 30 ஆண்டுகள் பணி செய்தவர்களை திறமையற்றவர்கள் என்று பழி சுமத்தி வீட்டுக்கு அனுப்புவதை கைவிடுவது, இடமாறுதலுக்காக காத்திருக்கும் பிற மாநிலத்தவர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பது, நிரந்தர தொழிலாளர்களின் வேலையை பறித்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கும் சட்டத்தை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தினர் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு கிளை தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் கணேஷ்குமார் முன்னிலை வகித்தார், பொருளாளர் வீரக்குமார் வரவேற்றார். இதில் கலந்து கொண்ட ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து மத்திய அரசுக்கு எதிராகவும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த நிலையில் மத்திய அரசின் ரெயில்வே தொழிலாளர்களுக்கு ஏற்பட இருக்கும் பாதகமான முடிவுகளை எதிர்த்தும், 50 ரெயில் நிலையங்கள், 150 விரைவு ரெயில்களை தனியாரிடம் ஒப்படைக்கும் வகையில் வெளியிட்ட மத்திய அரசின் உத்தரவு நகலை தீ வைத்து எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பூராசாமி, அருண், மகாலட்சுமி, தீபலட்சுமி, மணி, ஜெயபிரகாஷ் உள்பட ஊழியர்கள், தொழிலாளர்கள் என்று பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு செயலாளர் சுந்தரராஜன் தலைமை தாங்கினார். திருச்சி ரெயில்வே கூட்டுறவு நாணயச்சங்க இயக்குனர் தயாளன் முன்னிலை வகித்தார்.
இதில் நிர்வாகிகள் இருதயராஜ், விஜயபாஸ்கர், குருமூர்த்தி உள்பட ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும், கருப்பு பட்டை அணிந்து கலந்து கொண்டு மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story