குடிமராமத்து திட்டத்தில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் - அமைச்சர் பாஸ்கரன் பேச்சு


குடிமராமத்து திட்டத்தில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் - அமைச்சர் பாஸ்கரன் பேச்சு
x
தினத்தந்தி 24 Oct 2019 4:30 AM IST (Updated: 24 Oct 2019 12:36 AM IST)
t-max-icont-min-icon

குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்துவதில் மாநிலத்திலேயே சிவகங்கை மாவட்டம் முதலிடத்தில் திகழ்கிறது என்று அமைச்சர் பாஸ்கரன் பேசினார்.

சிவகங்கை,

மாவட்ட வேளாண்மை துறை சார்பில் மானாவாரி பயிர்கள் சாகுபடி குறித்த கருத்தரங்கு தொடக்க விழா மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிவகங்கையில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு மானாமதுரை எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார்.

விழாவில் கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரிய அமைச்சர் பாஸ்கரன் மானாவாரி பயிர்கள் சாகுபடி குறித்த பயிற்சி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கி 2-ம் பசுமை புரட்சியை உருவாக்கினார். விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் அவர்களுக்கு மூலதன பொருட்கள் மற்றும் இடுபொருட்கள் தங்கு தடையில்லாமல் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதற்காக தற்போது அவற்றை அரசே மானிய திட்டத்தில் வழங்கி வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை கிராமங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு கண்மாய்கள் அதிகம் உள்ளன. பொதுவாக இப்பகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. விவசாயிகளின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடிமராமத்து திட்டத்தை தொடங்கி அதை மாநிலம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதிலும், குறிப்பாக சிவகங்கை மாவட்டம் குடிமராமத்து திட்டத்தில் மாநிலத்திலேயே முதன்மை மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. கடந்த 10 தினங்களாக பெய்த மழையில் அனைத்து கண்மாய்களிலும் தண்ணீர் பெருகி உள்ளன.

மேலும் பெரியாறு மற்றும் வைகை ஆற்றில் இருந்து விவசாயிகளுக்கு பாசன வசதிக்காக தண்ணீர் கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல் விவசாயிகளும் தண்ணீர் அளவிற்கேற்ப குறுகிய கால பயிர்கள் சாகுபடி செய்ய முன்வர வேண்டும். அதிகம் லாபம் பெறக்கூடிய மானாவாரி பயிர்களை பயிரிட்டு அதிக மகசூல் பெறலாம். அதற்கு மாவட்ட வேளாண்மைத்துறை மூலம் தேவையான பயிற்சி மற்றும் மானிய திட்டத்தில் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் அரசு அலுவலர்களின் ஆலோசனைகளை பெற்று மானாவாரி பயிர்களை பயிரிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக வேளாண் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அமைச்சர் பாஸ்கரன் பார்வையிட்டார். பின்னர் வேளாண் துறை சார்பில் 12 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த பண்ணை மகளிர் குழுக்களுக்கு ரூ.3½ லட்சம் மதிப்பீட்டில் சுழல்நிதி கடன்களும், தோட்டக் கலைத்துறை மூலம் ரூ.3.15 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் உபகரணங்கள் மற்றும் காய்கறி நாற்றுகளும், மண்வள அட்டையும் என மொத்தம் ரூ.6.65 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.

விழாவில் வேளாண்மை துறை இணை இயக்குனர் கணேசன், துணை இயக்குனர் சசிகலா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) சர்மிளா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ராஜேந்திரன், வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர்கள் செந்தூர்குமரன், பெர்டில் கிரேஸ், உதவி இயக்குனர்கள் பன்னீர்செல்வம், பரமேஸ்வரன், மோகன்தாஸ், சவுமியன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story