டெங்கு கொசுப்புழு உற்பத்தி: ஒப்பந்ததாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் கலெக்டர் நடவடிக்கை


டெங்கு கொசுப்புழு உற்பத்தி: ஒப்பந்ததாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 24 Oct 2019 4:30 AM IST (Updated: 24 Oct 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகி இருந்ததால் ஒப்பந்ததாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் அண்ணாதுரை நடவடிக்கை எடுத்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களிடம் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. தஞ்சை பழைய பஸ் நிலையத்தை புதுப்பொலிவுடன் கூடிய வகையில் மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக குழி தோண்டப்பட்டு, கட்டுமான பொருட்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தநிலையில் கலெக்டர் அண்ணாதுரை நேற்று பழைய பஸ் நிலையத்தில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது இரும்பு கம்பிகளிலும், குழியிலும் மழைநீர் தேங்கி இருந்ததுடன், அதில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கட்டிட பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரருக்கு கலெக்டர் அண்ணாதுரை ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.

அரசு பணிமனை

மேலும் டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கி இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் பல மடங்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தார். பின்னர் பழைய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள ஓட்டல்கள், கடைகளுக்கு சென்ற கலெக்டர், கிரைண்டர், குளிர்சாதன பெட்டி போன்ற பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறதா? எனவும், பிளாஸ்டிக் பயன்பாடு இருக்கிறதா? எனவும் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அவர், கரந்தையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனைக்கு சென்று, அங்கு பழைய டயர்களில் மழைநீர் தேங்கி இருக்கிறதா? என பார்வையிட்டார்.

அப்போது அவர், டயர்கள் மட்டுமின்றி வேறு எந்த இடத்திலும் மழைநீர் தேங்காத வகையில் பார்த்து கொள்ள வேண்டும் என அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார். தற்காலிக பஸ் நிலையத்திற்கு சென்ற கலெக்டர், அங்கும் மழைநீர் தேங்கி நிற்கிறதா? எனவும், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு செய்தார். மேலும் தஞ்சை மாநகராட்சி நீர்த்தேக்க தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். தொட்டிகளில் ஏற்றப்படும் தண்ணீர் சுத்தமாக இருக்க வேண்டும் எனவும் ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

தஞ்சை விரைவு போக்குவரத்து கழக பணிமனைக்கு சென்ற கலெக்டர், தண்ணீர் தேங்காமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அலுவலர்களை அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன், அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் நடராஜன், மாநகர்நல அலுவலர் நமச்சிவாயம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story