நாமக்கல் அருகே விபத்து: லாரி மோதி 2 வாலிபர்கள் பலி மற்றொருவர் படுகாயம்


நாமக்கல் அருகே விபத்து: லாரி மோதி 2 வாலிபர்கள் பலி மற்றொருவர் படுகாயம்
x
தினத்தந்தி 24 Oct 2019 3:45 AM IST (Updated: 24 Oct 2019 2:28 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

நாமக்கல்,

நாமக்கல் அருகே உள்ள வேப்பநத்தத்தை சேர்ந்தவர் ஜான்பாஸ்கர். இவரது மகன் ரோஹித் (வயது 21). டிப்ளமோ என்ஜினீயர். இவர் தனது நண்பர்கள் சேலம் அன்னதானபட்டி அசேன் (20), நாமக்கல் வண்டிக்கார தெரு மணி என்கிற மணிகண்டன் (22) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் வேப்பநத்தத்தில் இருந்து நாமக்கல் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.

மோட்டார் சைக்கிளை ரோஹித் ஓட்டி வந்தார். மற்ற இருவரும் பின்னால் அமர்ந்து பயணம் செய்தனர். நாமக்கல் அருகே உள்ள நாகராஜபுரம் பஸ்நிறுத்தம் அருகே வந்தபோது எதிரே வந்த லாரியும், இவர்களது மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதி கொண்டன. இந்த விபத்தில் தூக்கிவீசப்பட்ட ரோஹித் மற்றும் அசேன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மணிகண்டன் படுகாயம் அடைந்தார்.

கொலை வழக்கு நிலுவை

அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த அசேன் மீது கொலை மற்றும் வழிப்பறி வழக்கு நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story