கண்டக்டர் இல்லா பஸ் சேவை பெஸ்ட் குழுமம் அறிமுகம் செய்தது


கண்டக்டர் இல்லா பஸ் சேவை பெஸ்ட் குழுமம் அறிமுகம் செய்தது
x
தினத்தந்தி 24 Oct 2019 4:15 AM IST (Updated: 24 Oct 2019 4:12 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் கண்டக்டர் இல்லா பஸ் சேவையை பெஸ்ட் குழுமம் அறிமுகம் செய்து உள்ளது.

மும்பை, 

மும்பையில் கண்டக்டர் இல்லா பஸ் சேவையை பெஸ்ட் குழுமம் அறிமுகம் செய்து உள்ளது.

கண்டக்டர் இல்லா பஸ்

மும்பையில் மின்சார ரெயில் சேவைக்கு அடுத்தபடியாக பெஸ்ட் பஸ் 2-வது மிகப்பெரிய போக்குவரத்து சேவையாக விளங்கி வருகிறது. பெஸ்ட் பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையாக பெஸ்ட் குழுமம் அதிரடியாக பஸ் கட்டணத்தை குறைத்தது. இதன் மூலம் பெஸ்ட் பஸ்களில் அதிகளவில் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், பஸ் போக்குவரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக பெஸ்ட் குழுமம் முதல் முறையாக கண்டக்டர் இல்லா பஸ் சேவையை தொடங்கி உள்ளது. கண்டக்டர் இல்லா பஸ் சேவை சுற்றுலா பயணிகள், அலுவலகம் செல்வோர் வருகை அதிகம் உள்ள தென்மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இடையில் எங்கும் நிற்காது

இதன்படி மும்பை சி.எஸ்.எம்.டி. - கேட்வே ஆப் இந்தியா இடையேயும், சர்ச்கேட் - நரிமன்பாயிண்ட் இடையேயும் கண்டக்டர்கள் இல்லா பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து பஸ் புறப்படும் இடத்திலேயே அங்கு பணியமர்த்தப்பட்ட கண்டக்டர் மூலம் டிக்கெட் வழங்கப்படும். அங்கு அனைவரும் டிக்கெட் எடுத்து பயணம் செய்வதை கட்டணம் வசூலிக்கும் கண்டக்டர் பஸ் புறப்படுவதற்கு முன் உறுதி செய்து கொள்ளவேண்டும். ஏனெனில் பஸ்சில் ஏறி கண்டக்டர் டிக்கெட் வழங்க மாட்டார்.

பயணிகள் கூட்டம் அதிகம் உள்ள காலை நேரத்தில் இயக்கப்படும் கண்டக்டர் இல்லா பஸ்கள் மற்ற பஸ்களை போல வேறு எந்த நிறுத்தங்களிலும் நிற்காது. சி.எஸ்.எம்.டி.யில் இருந்து புறப்படும் பஸ் கேட்வே ஆப் இந்தியாவில் தான் நிற்கும். அதேபோல சர்ச்கேட்டில் புறப்படும் பஸ் நரிமன்பாயிண்டில் தான் நிற்கும்.இடையில் எங்கும் நிற்காது.

இதன் மூலம் பஸ் சேவை விரைவாகவும், பயணிகளின் பயண நேரம் குறையவும் செய்யும். இந்த தகவலை பெஸ்ட் துணை செய்தி தொடர்பு அதிகாரி மனோஜ் வரடே தெரிவித்தார்.

Next Story