மத்திய அரசு ஒரே நேரத்தில் 6 மருத்துவ கல்லூரிகளை தமிழகத்திற்கு அளித்து உள்ளது அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி


மத்திய அரசு ஒரே நேரத்தில் 6 மருத்துவ கல்லூரிகளை தமிழகத்திற்கு அளித்து உள்ளது அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 25 Oct 2019 4:45 AM IST (Updated: 24 Oct 2019 10:53 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவிலேயே முதல் முறையாக மத்திய அரசு ஒரே நேரத்தில் 6 மருத்துவ கல்லூரிகளை தமிழகத்திற்கு அளித்து உள்ளது என புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகராட்சி புதிய பஸ் நிலையத்தின் அருகே உள்ள சத்தியமூர்த்தி சாலையில் புதுக்கோட்டை நகராட்சியில் அம்ரூட் திட்டத்தின் கீழ் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய சிறுவர் பூங்கா இரப்பரால் ஆன தரை விரிப்பான்களை கொண்டு சிறுவர்கள் விளையாடுவதற்கு ஏற்றதாக அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் சிறுவர்களை கவரும் வகையில் நீரூற்றுகள், வண்ணவிளக்குகள், மரஇருக்கைகள் மற்றும் குழந்தைகள் விரும்பி புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வகையில் வண்ண ஓவியங்கள், சறுக்கு மரங்கள் போன்றவை அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பூங்காவின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார். இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டார். நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நடந்து முடிந்த 2 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி முகம் காட்டி உள்ளது மகிழ்ச்சிக்குரியது. இந்த மகிழ்ச்சி அனைத்தும் தமிழக முதல்-அமைச்சரையே சாரும். அ.தி.மு.க. அரசு தொடர வேண்டும் என்பதற்காகவும் அடுத்த சட்டமன்ற தேர்தலிலும், அ.தி.மு.க அரசு வரவேண்டும் என்பதற்காகவும் மக்கள் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து அ.தி.மு.க. அரசை விமர்சனம் செய்து வருகிறார். எதிர்க்கட்சிகளின் பணி விமர்சனம் செய்வது. ஆனால் மு.க.ஸ்டாலின் கனவுலகில் வாழ்ந்து கொண்டு விமர்சனம் செய்து வருகிறார்.

கனவு உலகத்தை புறக்கணித்து எதார்த்தமாக மக்கள் பணி செய்து வரும் அ.தி.மு.க. அரசுக்கு 2 இடைத் தேர்தலிலும் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்து உள்ளனர். இந்த வெற்றி வரும் உள்ளாட்சி தேர்தலிலும், அடுத்ததாக நடைபெற உள்ள சட்டமன்ற தொகுதி தேர்தலிலும் தொடரும். இந்தியாவிலேயே முதல் முறையாக மத்திய அரசு ஒரே நேரத்தில் 6 மருத்துவ கல்லூரிகளை தமிழகத்திற்கு அளித்து உள்ளது. எவ்வளவு விரைவாக மத்திய அரசு அனுமதி அளித்ததோ, அதே அளவு வேகமாக தமிழக அரசு மருத்துவ கல்லூரி பணிகளை விரைந்து முடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அன்னவாசலில் புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையை திறந்து வைத்தார். பின்னர் அன்னவாசல் கூட்டுறவு ஆசிரியர் சிக்கன நாணய சங்கத்திற்கு ரூ.1 கோடியே 17 லட்சம் கடன் உதவிக்கான காசோலையை வழங்கினார். இதில் மாவட்ட கூட்டுறவு வாங்கி தலைவர் சின்னத்தம்பி, மதர்தெரசா கல்வி நிறுவன தாளாளர் உதயக்குமார், வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் ஆசாராணி, கூட்டுறவு சங்க தலைவர் ராமசாமி, நில வங்கி தலைவர் சாம்பசிவம், நுகர்வோர் குழு தலைவர் அப்துல்அலி, சாலைமதுரம், முத்தமிழ்செல்வன், ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அன்னவாசல் அருகே உள்ள மதியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீரென ஆய்வு செய்தார். அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர் மற்றும் செவிலியர் பணிக்கு குறித்த நேரத்தில் வராததால் அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிக்கு பரிந்துரை செய்தார். அதன் பின்னர் மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகளிடம் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

Next Story