விருத்தாசலம் அருகே, டாஸ்மாக் விற்பனையாளரை வெட்டி ரூ.2 லட்சம் பறிப்பு
விருத்தாசலம் அருகே டாஸ்மாக் விற்பனையாளரை வெட்டி ரூ.2 லட்சத்தை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
விருத்தாசலம்,
கள்ளக்குறிச்சி அருகே உள்ள குருபீடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 36). இவர் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் வேல்முருகன் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு, வசூலான ரூ.2 லட்சத்தை எடுத்துக் கொண்டு மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே டி.மாவிடந்தலில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென வேல்முருகன் ஓட்டிச்சென்ற மொபட் மீது மோதியது. இதில் அவர் மொபட்டுடன் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது அந்த மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 3 பேர், வேல்முருகனை சரமாரியாக தாக்கியதோடு, கத்தியால் அவரது கையில் வெட்டினர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.2 லட்சத்தை பறித்துக் கொண்ட மர்மநபர்கள் 3 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
மர்மநபர்கள் கத்தியால் வெட்டியதில் பலத்த காயம் அடைந்த வேல்முருகனை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் விற்பனையாளரை கத்தியால் வெட்டி பணத்தை பறித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story