பணபலத்தால் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது டி.டி.வி. தினகரன் பேட்டி


பணபலத்தால் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது டி.டி.வி. தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 24 Oct 2019 11:15 PM GMT (Updated: 24 Oct 2019 6:29 PM GMT)

பணபலத்தால் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது என்று, தஞ்சையில் டி.டி.வி. தினகரன் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை தொம்பன்குடிசை பஸ் நிறுத்தம் அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட மாணவரணி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வினியோகம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- , நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

துரோகிகள்

கே: அ.தி.மு.க.வில் இருந்து விலகி சென்றவர்களை பொதுக்குழுவை கூட்டி சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்படும் என ஓ.பன்னீர்செல்வம் சொல்லி இருக்கிறாரே?

ப: யார் அவர்களிடம் சேருவதற்கு போய் நிற்கிறார்கள். ஏதோ இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம் என்பதற்காக அவர்கள் எதை வேண்டுமானாலும் பேசுவார்கள். பணப்பலத்தால் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது அனைவருக்கும் தெரியும்.

இது பெரிய வெற்றி கிடையாது. கடந்த 2006 முதல் 2011 வரை தி.மு.க. ஆளும் கட்சியாக இருந்தபோது அனைத்து இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றார்கள்.

2010-ம் ஆண்டு பென்னாகரம் இடைத்தேர்தல் வரை வெற்றி பெற்றார்கள். ஆனால் 2011-ம் ஆண்டு தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மக்கள் எல்லாவற்றையும் கவனித்து கொண்டு தான் இருக்கின்றனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துரோகிகளுடன் இணைவதற்கான வாய்ப்பு இல்லை. நீங்கள் தான் போய் அவர்களிடம் கேள்வி கேட்டு கொண்டு இருக்கிறீர்கள். எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். இன்னும் எத்தனையோ வேலைகள் எங்களுக்கு இருக்கிறது.

சட்டப்படி

கே: சிறையில் இருந்து சசிகலா வெளியே வருவதில் சிக்கல் நீடிக்கிறது என சொல்கிறார்களே?

ப: உரிய நேரத்தில், சரியான நேரத்தில் வருவார்கள். நீங்கள் தான் இன்றைக்கு வருவார். நாளை வருவார். தீபாவளிக்கு வருவார் என நீங்கள் சொல்வதற்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது. சட்டப்படியான முயற்சிகளை நாங்கள் செய்து வருகிறோம்.

கே: சசிகலா வந்த பிறகு அ.தி.மு.க.வில் மாற்றம் இருக்குமா?

ப: அ.தி.மு.க.வில் என்ன மாற்ற வர வேண்டும். ஆட்சி முடிந்தவுடன் அந்த கட்சி இல்லாமல் போய்விடும். ஆட்சியில் இருப்பதால் அ.தி.மு.க. என்ற கட்சி இருக்கிறது.

இவ்வாறு அவர் அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி, மாவட்ட செயலாளர்கள் சேகர், ராஜேஸ்வரன் மாவட்ட மாணவரணி செயலாளர் செந்தில்குமார், மாவட்ட அவைத் தலைவர் ஜோதி, பொருளாளர் விருத்தாசலம், பகுதி செயலாளர்கள் சண்முகசுந்தரம், மகேந்திரன், அழகுராஜா, செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் செந்தில்வேலன், செந்தில்குமார், சுப்பு, மதியழகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story